Wednesday, July 22, 2020

ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (6)


          புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.

         “ஹயம்” என்ற வார்த்தை “ஹஸ்வம்” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. ஹஸ்வம் அல்லது ஹயம் என்றால் “குதிரையை” குறிக்கும் சொல்லாகும். விலங்குகளில் குதிரை வலிமை மிகுந்த வேகமாக, ஓடக்கூடிய, அதே நேரத்தில் அறிவுக்கூர்மை மிக்க ஒரு விலங்காகும். ஒரு மனிதனின் இயல்பையும், அவனின் குணத்தையும் புரிந்து கொள்ளும் திறன் குதிரைக்கு உண்டு. அதே நேரத்தில் மனிதர்களுக்கு பயணத்திற்கும், அவனது சுமைகளை சுமக்கவும் ஆதி காலத்திலிருந்து பயன்பட்டிருக்கிறது.



             ஔஷதகிரி எனும் மலைக்கு மேல், ஸ்ரீநரசிம்மர் சந்நிதிக்கு எதிரே இருந்த அரச மரத்தடியில், கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் இருந்தார் மகான் ஒருவர்.

               கருட மந்திரம் தன் சக்தியை வெளிக்காட்டியது. பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாரின் தரிசனம் மகானுக்குக் கிடைத்தது. அப்போது, ஸ்ரீகருடாழ்வார் அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந்தார்.

           கருட பகவான் உபதேசித்த ஹயக்ரீவ மந்திரம் மகானின் உள்ளத்தில் பதிந்தது. அந்த மந்திரத்தை உச்சரித்து, ஸ்ரீஹயக்ரீவரை தியானித்தார். வழிபட்டார். ஸ்ரீஹயக்ரீவரின் திவ்விய தரிசனத்தைப் பெறும் பாக்கியம் கிடைக்கப் பெற்றார் அந்த மகான். அவரைஅனுக்கிரஹித்தார் ஸ்ரீஹயக்ரீவர். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அந்த மகான்... ஸ்ரீதேசிகன்.


                              தனக்குத் திருவருள் கிடைத்த திருவஹீந்திரபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தார். (ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாஷத், தேவ நாயக பஞ்சாஷசத், அச்யுத சதகம் முதலான ஸ்தோத்திரங்களையும் மும்மணிக் கோவை, நவமணிமாலை) முதலான தமிழ்ப் பிரபந்தங்களையும் அருளிச் சென்றார் ஸ்ரீதேசிகன்!

          ஒருமுறை, துறவி ஒருவர் தேசிகனிடம் வாதம் புரிய வந்தார். அவர் ஒரு மந்திரவாதியும்கூட. ஆனாலும் ஸ்ரீதேசிகனின் முன்னால் துறவியின் வாதம் எடுபடவில்லை; தோல்வி அடைந்தார். எனினும், தேசிகனை மந்திர சக்தியால் பழிவாங்கத் துடித்தார்! ஒரு குளத்துக்குள் தடக்கென்று இறங்கியவர், குளத்து நீர் முழுவதையும் குடித்தார். அதன் விளைவாக ஸ்ரீதேசிகனின் வயிறு பருக்கத்தொடங்கியது. இந்தச் சூழ்ச்சியை அறிந்த ஸ்ரீதேசிகன், கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அருகில் இருந்த தூண் ஒன்றை நகத்தால் கீறினார். அவ்வளவுதான்... தூணில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது. படிப்படியாக ஸ்ரீதேசிகனின் வயிறும் பழைய நிலைக்குத் திரும்பியது. அதைக் கண்ட மந்திரவாதி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீதேசிகனை நமஸ்கரித்தார்.

          கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரத்தில், அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஔஷதகிரியில் (மலையில்) ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஔஷதகிரி சிறிய குன்று என்றபோதிலும், மேலே பிரமாண்டமான கோயிலில் அருமையாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர்! தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.


     செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், 
பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. 

      வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம். 

ஹயக்ரீவர் மந்திரம் : 

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
 ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் 
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

                    இம்மந்திரத்தை பெருமாளுக்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் ஹயக்ரீவர் படமிருந்தால், அவர் படத்திற்கு முன்பு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி, ஏதேனும் பழம் ஒன்றை நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை முறை கூறி வழிபடலாம். மேலும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நிதி இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, மலர்களை சூட்டி, சிறிது குதிரைக்கொள்ளை நிவேதனமாக வைத்து வழிபட, காலையில் இருந்து வரும் அணைத்து தடைகளும் விலகும். அதோடு நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். மேலும் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற தீய சக்திகளின் பாதிப்பகளும் நீங்கும்.



ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (5)

  "ஹயக்ரீவ முபாஸ்மஹே"



           மதுகைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுஅவர்களுடன் போர் புரிந்தார். அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 


        இருவரையும் வதைத்த பின்னர் மேலும் பல அசுரர்களோடு, ஆயிரக்கணக்கான முறை போரிட்டு அவர்களையெல்லாம் கொன்றார். இதனால் அவர்களைப்புற்றார்.
மிகவும் சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்தவாரே, நாண் பூட்டிய தனது வில்லை பூமியில் ஊன்றி, கழுத்தை அதன் மீது சாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். 


             திருமால் இவ்வாறு திடீரென்று தூக்கம் கொண்டபோது உலகமே செயலிழந்து போனது! தேவர்கள் கதி கலங்கி பிரம்மாவும், சிவனும் சேர்ந்து திருமாலின் தூக்கத்தை எப்படியேனும் கலைத்து அவரைத் துயிலெழச் செய்ய வேண்டுமென்று வேண்டினர். பிரம்மனால் படைக்கப்பட்ட பூச்சி இனங்களில் ஒன்றான கரையான் பூச்சி அந்த ஊன்றப்பட்ட வில்லின் நாண் நுனியினைக் கடித்து அரித்தால், நாண் அறுந்த அந்த ஓசையில் இறைவன் துயிலெழுந்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

          பிரம்மாவின் கட்டளைப்படி கரையான்கள் ஒன்று திரண்டு வில்லின் நுனியை அரிக்கத் தொடங்கின. பேரொலியேடு நாண் அறுந்தது. அதே வேகத்தில் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்து விட்டது. இதைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டு போனார்கள்.
ஒருமுறை மகாவிஷ்ணு, லட்சுமியின் முகத்தைப் பார்த்து கேலி செய்ய, தேவியோ கோபம் அடைந்து தன்னைப் பரிகாசம் செய்த இறைவனின் தலை ஒரு சந்தர்ப்பதில் அறுந்து விழக் கடவது என்று சாபமிட்டாளாம். இந்த சாபத்தின்படியே திருமாலின் தலை அறுந்து போயிற்றாம்.

             இதே நேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரைத் தலையுடன் கூடிய ஹயக்ரீவன் என்ற அசுரன் ஒருவன் தேவி பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவி அவனுக்கு காட்சி அளித்தபோது, குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். பிறகு அனைத்து தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான்.

        இதற்கிடையே பிரம்மாவும் இதர தேவர்களும் திருமாலின் உடலில் வேறு ஒரு பொருத்தமான தலையை கண்டுபிடித்து பொருத்துமாறு தேவ சிற்பியான துவஷ்டாவை வேண்டினர். துவஷ்டாவும் ஓர் அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார். இதன் மூலம் குதிரைத் தலையுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார்.


      ஸ்ரீஹயக்ரீவர் இந்திரனையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்த ஹயக்ரீ வாசுரனை வதம் செய்தார்.

                 ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏடையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.




         அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

      புதனின் அதிதேவதை விஷ்ணு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு என புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அதிகரிக்கும். கல்வித்தடை நீங்கும்.

           அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார். இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்' எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம்.

      ஸ்ரீஹயக்ரீவரின் வாய் சற்றுத் திறந்தது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இது அவர் எப்போதும் பிரணவ மந்திரமான ஓம் என்பதை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருப்பதை காட்டுகிறது. அசுரன் ஹயக்ரீவன் நான்கு வேதங்களையும் கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்த போது, ஸ்ரீஹயக்ரீவர் அவனைக் கொன்று வேதங்களை மீட்டு வந்து வேத சொரூபமாக விளங்குகிறார். அவித்யையும், அஞ்ஞானத்தையும் அகற்றும் சந்திரனின் அழகிய ஒளிபோல ஸ்ரீஹயக்ரீவர் விளங்குவதால், அவர் சந்திரப் பிரபையில் அமைந்துள்ளது போல சித்திரிக்கப்படுகிறார்.




              கி.பி. 1480 ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.

      படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.

           

ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (4)



       "வராஹ மித்ரரே! உங்களுக்கு இப்பொழுதே இந்த இடத்திலேயே அகஸ்தியர் முதலாக பதினெட்டு வகையான சித்தர்கள் முன்னிலையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் பட்சிகளின் மங்களமான சப்தங்களுக்கு நடுவில் திருமலை வாசனின் அருட்கடாட்சத்தோடு புனிதமிகு கங்கை நதி நீரைத் தெளித்து "ஞானத்தை" தருகிறேன், ஏற்பாயாக!" என்றாள்.

அடுத்த வினாடியே விண்ணுலகத் தேவர்கள் மலர்மாலை தூவ ரிஷிகளும் முனிவர்களும் வேதகோஷத்தோடு வாழ்த்த சரஸ்வதிதேவி தன் அருட்கடாச்சத்தை ஹயக்ரீவருக்கு அளித்தாள்.

"வராஹமித்ரரே! இன்று முதல், இந்த திருமலையில் அவதாரம் எடுத்திருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள் அத்தனை பேரும் முதலில் தங்களை தரிசித்து அனுமதி பெற்ற பிறகுதான் வேங்கடவனைத் தரிசிப்பார்கள். தங்களை தரிசிக்காமல், வேங்கடவனைத் தரிசித்தால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது. இது திருமாலின் கட்டளை!" என்றார் அகத்தியர்.

"ஹயக்ரீவரே! பிரம்மாவின் கட்டளைப்படி என்னுடன் இதுவரை இருந்த ஞானப் பொக்கிஷத்தை பெரும்பகுதி யாம் உமக்குத் தந்தோம். கல்வியில் மேனிலை பெறுவதற்கும், வாக்கில் உயர்நிலை பெறுவதற்கும், சகலவிதமான கலைகளிலும் சிறந்து ஓங்குவதற்கும் இனி என்னையே நம்பி இருக்க வேண்டியதில்லை."

இந்தக் கோனேரி மலையில் சிறு கோயிலைக் கொண்டு திருமால் முன்னிலையில் பக்தர்களுக்கு காட்சி தரும் உங்களை துதி செய்தால் போதும். தாங்களே ஞானத்திற்கு வழிகாட்டியாகவும் விளங்கப் போவதால், தங்கள் அருட்பார்வை பட்டால் போதும், அத்தனை பேருக்கும் ஞானபலம், புத்திபலம், வைரக்கியபலம், ஆரோக்கியபலம் ஆகியயாவும் கிட்டும். இனி தாங்கள் வேறு நான் வேறு அல்ல "சமபலம்" என்று பெருமாள் சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் மெய்சிலிர்த்து வராஹமித்ரரை வணங்கினார்கள்.

"முரட்டுத்தனம் கொண்டு, ஞானமின்மையால், சொல்வார் சொல்லைக்கேட்டு எந்தவித ஒழுக்கக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக வலம் வந்த என்னை திருமலை வேங்கடவனுக்கு இணையாக நிறுத்தி என் அறியாமையைப் போக்கிய கலைவாணிக்கும், இதற்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் பிரம்ம தேவருக்கும் என் நன்றி" என்று சொன்ன வராஹர், "நான் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க விரும்புகிறேன். வேங்கடவன்  கருணை காட்டுவாரா?" என்று பவ்யமாகக் கேட்டார்.

"நிச்சயமாக கருணை கொண்டு தரிசனம் கொடுப்பார்!"

"எனக்கு வேங்கடவனைத் தரிசிக்க ஆசையிருந்தாலும், சில நாழிகைக்கு முன்பு நான் செய்த தவறு என்னைக் கூச்சப்பட வைக்கிறது தேவி" என்றார் ஹயக்ரீவர்.

"வராஹரே! தாங்கள் தெய்வ சொரூபம் மிக்கவர். முன் ஜென்ம சாபத்தால் கோனேரிக் காட்டில் ஹயக்ரீவராக உலா வந்தீர்கள். வேங்கடவனின் கருணையால் அச்சாபம் நீங்கியது. திருமால் கருணை பெற்று இருப்பவர். அவரது அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிட்டும். வாருங்கள், நானே தங்களை அழைத்துக் கொண்டு அவரிடம் செல்கிறேன்" என்று கூறிய கலைவாணி பெருமாளை காணப் புறப்பட்டாள்.

"என் பக்கத்தில் எப்பொழுதும் இருந்து, என்னை நாடிவரும் பக்தர்களுக்கு நீயும் ஞானத்தையும், பக்தியையும் அளித்து உய்விக்க வேண்டும்" என்று வேங்கடவன், வராஹமித்திறரை ஆலிங்கனம் செய்து, அன்பாக உத்தரவிட்டார்.



இதைக் கேட்டு வராஹமித்ரர் புளகாங்கிதம் அடைந்தார்!

"நீயும் ஒரு பெருமாள் அவதாரம்தான். என்னைக் காப்பது என்பது என் பக்தர்களைக் காப்பது என்பது போலாகும். உனக்கு இங்கு மட்டும்தான் இடம், என்பதில்லை. எந்தெந்த பக்தர்கள் உன்னைத் தொழுது, கல்வியிலும், ஞானத்திலும், கலைத்துறையிலும் மேன்மை அடைகிறார்களோ, அங்கெல்லாம் கோயில் கொண்டு அருள் பார்வையை வீசும் பாக்கியம் உனக்குண்டு" என்று வேங்கடவன் மீண்டும் தொடர்ந்து சொன்னார்.

"பெருமாளே! இந்த அவதாரம் எத்தனை காலம் இருக்கும் என்பதை அடியேன் அறியலாமா?"  "கலிபுருஷனின் அவதாரங்கள் துர்தேவதைகளாக மாறி பெரும் படையோடு என்னிடம் மோதும். அப்போதுதான், யான் "கல்கி" அவதாரம் எடுப்பேன்." என்றார்.

"அப்படியென்றால், இன்னும் எத்தனையோ ஆண்டுகள் ஆகும் அல்லவா?" என்றார் அகத்தியப் பெருமான்.

"சொல்ல முடியாது. நான் கல்கி அவதாரம் எடுப்பதும், எடுக்காமலிருப்பதும் கலிபுருஷன் கையில்தான் இருக்கிறது" என்று வேங்கடவன் கூறிவிட்டு அமைதியானார்.

அகஸ்தியர் பவ்யமாக ஒரு கேள்வியை திருமலயானிடம் கேட்டார். "எல்லாரையும் விட்டுவிட்டு வராஹரை மட்டும் ஏன் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டீர்கள்?

     திருமால் கருணையுடன் பார்த்துவிட்டு "அகஸ்தியருக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கிறார். இந்த பதில் அகஸ்தியருக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான்" என்று ஆரம்பித்துச் சொல்லலானார்.

     "எங்கு ஞானம் இருக்கிறதோ அங்கு பக்தி இருக்கும். பக்தி இருக்கும் இடத்தில் பண்பு, பாசம், இறக்கம், கருணை இவை எல்லாம் குடிவரும். இப்படிப்பட்ட இடத்தில் தான் தெய்வ ஒளி வீசும். திருமலையில் என்னைத் தேடி வருபவர்களுக்கு பக்தி மட்டும் இருந்தால் போதும் என்றில்லாமல், அவர்களுக்கு ஞானமும் வேண்டும்."

  "அந்த "ஞானம்" வராஹரிடமிருந்து கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் வராஹரை என்பக்கம் நிறுத்தி வைத்துக் கொண்டேன்.  வேகத்திற்கு குதிரை ஒரு உதாரணம். சிறுத்தையைக் கூட வேகத்திற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அது ஒரு கொடிய மிருகம். அதைப் பார்க்க ஆசைப்படலாம். ஆனால், அதனோடு பழக முடியாது. அது அப்படிப்பட்ட குணம் கொண்டது. அதே சமயம் "வராஹர்" குதிரை முகத்தோடு கூடிய அவதாரம். எதையும் வேகமாக புத்தியில் பற்றிக் கொள்ள வேண்டும், என்பதற்காகத்தான், குதிரை முகத்தோடு கூடிய வராஹரை ஞான சொரூபமாக பக்கத்தில் வைத்துக் கொண்டேன்."

                                                                                                                  சித்தர் அகத்தியர் அருள்

ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (3)



     இந்தக் குரலைக் கேட்டதும் "கலிபுருஷன்" அடுத்த வினாடியே அங்கிருந்து மறைந்து போனான்.

வேகமாகப் பாயத் துடித்து ஹயக்ரீவர் எவ்வளவோ முயன்றும் அவரால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல், ப்ரமாஸ்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றுவிட்டார்.

அவருடைய வேகம், பலம், ஆத்திரம், கோபம், வீரம் எல்லாம் பலமற்று, பொடிப் பொடியாகியது.

தன்னை இப்படிக் கட்டுப்படுத்தியது யார்? என்று ஹயக்ரீவர் யோசித்து உணரும் முன்னர் அருகிலிருந்த செடி, கொடி மலைக் குன்றை தாண்டி கமண்டலத்தோடு அவர் முன் வந்து நின்றார் அகஸ்தியர்.

கலைவாணி மூலமாக ஹயக்ரீவருக்கு ஞானோபதேசம் செய்ய பிரம்மா, ஏற்பாடு செய்தார். அதன்படியே கலைவாணியும் ஹயக்ரீவரிடம் அறிவுரை கூற விரும்பினாள். ஆனால் ஹயக்ரீவர் ஏற்கவில்லை. முன்பு இருந்ததைவிட பன்மடங்கு வேகத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் கனைத்துக் கொண்டு கல் அவதாரம் எடுத்த திருமாலுடன் போர்புரிய, ஹயக்ரீவர் முன் வந்த பொழுது, அகஸ்தியர் தாங்க முடியாமல் ஹயக்ரீவரைத் தடுத்து நிறுத்தினார்.

யாருக்கும் கட்டுப்படாத வேகத்தோடு ஹயக்ரீவர் வந்தாலும், அகத்தியப் பெருமானின் சொல்லால் அங்குமிங்கும் அசைய முடியாதவாறு நின்று விட்டார். ஹயக்ரீவருக்கு தலையாயச் சித்தரான அகஸ்தியரைப் பற்றித் தெரியும். ஆனால்  பார்த்ததில்லை. இப்பொழுதுதான் அகத்தியரைப் பார்த்தார்.

அகத்தியரின் சொல்லுக்கே தான் அசையாமல் நின்றுவிட்ட நிலையை எண்ணிப் பார்த்த ஹயக்ரீவருக்கு தன் நிலை புரிந்தது.

அகத்தியரின் பலமும் புரிந்தது.

"ஹயக்ரீவரே! சற்று அமைதி கொள்க. தாங்கள் யார் என்பதை அடியேன் அறிவேன். சாட்சாத் திருமாலின் சகலவிதமான நற்குணங்களுடன் அவதாரம் எடுத்த தாங்கள் முனிவர்களைப் பகைத்துக் கொண்டதால் குதிரையாக இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறீர்கள்.

முனிவர்கள், ரிஷிகள் சாபம் விரைவில் தங்களை விட்டு விலகப் போகிறது. கோடானு கோடி ஜனங்களும் தங்களுடைய கருணையினால் புத்திக் கூர்மை பெற்றுத் திளைக்கப் போகிறார்கள் என்று எனக்கு ஞானக் கண் மூலம் தெரிகிறது. இப்படியிருக்க, தாங்கள் கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு திசைமாறிப் போகலாமா?" என்று பவ்யமாகக் கேட்டார், அகஸ்தியப் பெருமான்.

தன்னை அசைய விடாமல் கட்டிப் போட்ட அகத்தியப் பெருமான் மேல் கடும் கோபம் கொண்டு 

"அகஸ்தியரே!" என்று படு பயங்கரமாக கனைத்தபடி "உங்களுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை. முதலில் என்னுடைய வேகத்தைத் தடுத்து நிறுத்தியது, என்னுடைய இடத்திற்கே வந்து எனக்கே உபதேசம் கூறி, திருமாலுக்கு    சாதகமாகச் செயல்பட்டது. இந்த இரண்டிற்கும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" என்றார் ஹயக்ரீவர், அகத்தியப் பெருமானிடம்.



ஹயக்ரீவரின் கோபத்தால் சற்றும் தளராத அகத்தியப் பெருமான் "ஹயக்ரீவரே! விநாசகாலே விபரீத புத்தி; என்ற பழமொழி தங்களுக்குத் தெரியாததா? தாங்கள் என்மேல் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. ம்ம்... முடிந்தால் நீங்கள் அடுத்த அடி  வைக்கலாம். ஏன் நான்கு கால் பாய்ச்சலில் கூட பாய்ந்து செல்லலாம். நான் ஒன்றும் நிற்க மாட்டேன் அய்யனே" என்றார்.

"என்ன முனிவரே, வேடம் போடுகிறீர்? செய்வதையும் செய்துவிட்டு என்ன வேடிக்கையும் பார்க்கிறீர்களே! முதலில் என்னை இங்கிருந்து போகவிட வழிகாட்டும்" என்றார் ஹயக்ரீவர்.

"எங்கே  போகிறீர்கள்?" என்றார் அகத்தியர்.

"என் அனுமதியின்றி குடிபுகுந்த அந்த கலஅவதாரமான வேங்கடவனை இங்கிருந்து விரட்டப் போகிறேன்." என்றார் ஹயக்ரீவர்.

"அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. திருமால், யாருக்கும் எந்த விதத் தீங்கும் இழைக்க மாட்டார். அதுமட்டுமன்றி - யார் என்ன பிரார்த்தனை, எங்கு செய்தாலும் அதை சட்டென்று நிறைவேற்றியும் காட்டுவார்." என்றார் அகத்தியர்.

"ஓ! அப்படியா செய்தி! அப்படியென்றால் அவரோடு நான் மோதவேண்டாம். நான் சொன்னால் அவர் அப்படியே கேட்டுவிட்டு இங்கிருந்து சென்று விடுவாராக்கும்?"

"ஆமாம்! ஆனால் ஒரு சிறு திருத்தம். தாங்கள் "சொன்னால்" என்பதை விட அவரிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டு கேட்டால் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்தான், கேட்டவர்களுக்கு கேட்டதெல்லாம் தரும் கருணை வள்ளலாயிற்றே!"

"இப்போது என்னதான்  சொல்கிறீர்கள்?"

"திருமலையில் குடிகொண்டிருக்கும் திருமாலிடம் தாங்கள்  விவேகத்தோடு மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் தங்கள் வேண்டுகோளை நிச்சயம் ஏற்பார்."

"அப்படியும் அவர் அங்கிருந்து நகர மறுத்தால்?"

"தங்கள் ப்ரார்த்தனையில்தான் குற்றம் இருக்கும் என்பேன்."

"எப்படி பிரார்த்தனை செய்வது, எங்கிருந்து செய்வது?"

"அப்படி கேளுங்கள். எனக்கு   முழுமையாக எதுவும் தெரியாது. பிரார்த்தனையை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை கலைவாணி சரஸ்வதி தேவிதான் மிக நன்றாக அறிவாள். அந்த சரஸ்வதி தேவியை  நோக்கி கைகூப்பி நமஸ்கரித்துக் கேளுங்கள்" என்றார்.

"கலைவாணி வருவாளா?"

"கண்டிப்பாக வருவாள். பிரார்த்தனை சொல்லித்தருவாள். திருமலை வேங்கடவனும் உங்கள் பிரார்த்தனையை கேட்டு செவி மடுப்பார். பிறகென்ன? சண்டை போடாமல், காயம்படாமல் நீங்கள் நினைத்ததை அடைந்து விடுவீர்கள்" என்று பவ்யமாக சொன்னார் அகத்தியர்.

அகத்தியப் பெருமானுக்கு உற்ச்சாகம் தாங்கமுடியவில்லை. எப்படியோ ஹயக்ரீவரின் வேகத்தை தடுத்து நிறுத்தி அவருக்கு நல்வழி காட்டிவிட்டோம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து நகன்றார்.


அதெப்படி சண்டைபோடாமல் ஜெயிக்க முடியும்னு குறுமுனி சொல்கிறாரே, அதையும்தான் பார்ப்போமே என்று ஹயக்ரீவர் யோசித்து கலைவாணியை நோக்கி "சரஸ்வதி தேவியே இங்கு வா" என்று பலமுறை அழைத்தார். பலமுறை அழைத்தும் கலைவாணி வராததால், ஹயக்ரீவருக்கு கோபம் வந்தது. ஒரே பாய்ச்சலில் வேங்கடவன் மீது பாய்ந்தார். ஹயக்ரீவர் வரும் வேகத்தை அறிந்து, சட்டென்று பூமிக்குள் தன்னை இழுத்துக் கொண்டார், பெருமாள்.


இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹயக்ரீவர், எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து தலைக்குப்புற கோனேரி நதிப்ரவாகத்தில் விழுந்து கொண்டிருக்கும் பொழுதுதான், சில நாழிகை முன்பு கலைவாணி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

"எப்பொழுதுதாவது என் உதவி தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை அழைத்தால் ஓடி வந்து உதவுகிறேன்" என்று சரஸ்வதி தேவி சொன்னது ஹயக்ரீவருக்கு நினைவுக்கு வரவே, "வராஹன் அழைக்கிறேன்! தேவி சரஸ்வதியே வருக" என்று மூன்று முறை அழைத்தார்.

அடுத்த நாழிகைக்குள்,

கோனேரிக்கரையின் நதியில் விழுந்து கால்கள் ஒடிந்து விழவேண்டிய ஹயக்ரீவரை சரஸ்வதிதேவி தாங்கிக் கொண்டாள். ஹயக்ரீவர் பெரும் ஆபத்திலிருந்து தப்பினார்.

நன்றாக வளர்ந்திருந்த பசும்புல் செடியில் ஹயக்ரீவர் மயக்க நிலையில் கண் துயின்று கொண்டிருக்க, அகஸ்தியர் வெண்சாமரத்தால் அவருக்கு வீச, சரஸ்வதிதேவி கருணை பொங்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கலிபுருஷன், அங்கே காணப்படவில்லை.

சில நாழிகை கழிந்தது.

பட்சிகள் சப்தத்தினாலும் அருகிலிருக்கும் பாபநாசம் மலையிலிருந்து தெள்ளிய நீர் வீழ்ச்சி அமைதியாக பூமாதேவியின் பாதங்களை நோக்கி மகிழ்ச்சியோடு நீர்த்திவலைகளை அங்குமிங்கும் தெளித்துக் கொண்டு சென்றதால், அவற்றின் குளிர்ச்சி ஹயக்ரீவரின் முகத்தில் பட்டுச் சென்றது.

மயங்கி கிடந்த ஹயக்ரீவர் மெல்ல கண் திறந்தார்.

எதிரே, கருணை பொங்கும் குரு பகவான் ஸ்தானத்தில் அன்னை சரஸ்வதி தேவி அமர்ந்திருக்க, அகஸ்தியர் சாமரம் வீசுவதையும், சித்தர்கள், முனிவர்கள், ராஜ ரிஷிகள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை மெல்லிய குரலில் தனக்காக ஜெபிப்பதையும் கேட்டு, துள்ளி எழுந்தார்.

"ஹயக்ரீவரே அவசரப்படாதீர்கள். அமைதியாக அமருங்கள். தங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை" என்றாள் கலைவாணி.



ஹயக்ரீவருக்கு இப்பொழுதுதான் நடந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வந்தது.

கலிபுருஷன் பேச்சைக் கேட்டிருந்தால் தன் கதி என்ன? என்று யோசித்துப் பார்த்த ஹயக்ரீவருக்கு, அன்னை கலைவாணி மீதும், அகஸ்தியப் பெருமான் மீதும் அளவற்ற மரியாதை ஏற்பட்டது.

கலைவாணி தேவியிடம் கை கூப்பி நன்றி சொன்னார்.

"தாயே! எனக்கு அசுரபலம் வேகம் இருந்தாலும், ஆழ்ந்த கல்வி ஞானம் இல்லை. இருந்திருந்தால், கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு பாதாளத்தில் விழுந்திருக்கமாட்டேன். நான் தங்களிடம் தன்யனானேன். எனக்கு "ஞானத்தை" சொல்லிக் கொடுங்கள். அன்னை சரஸ்வதி தேவியே" என்றார் ஹயக்ரீவர்.

"ஹயக்ரீவரே! பிரம்மா சொன்னபடியேதான் எல்லாமும் நடக்கின்றன. தங்களுக்கு முனிவர்களால் முன் ஜென்மத்தில் கொடுத்த சாபம் இன்று முதல் விலகிவிட்டது. இனி தாங்கள் ஹயக்ரீவராக காட்ச்சியளித்தாலும், திருமலையில் இனி வராஹமித்ரர் என்ற திருநாமத்தோடு திருமலை வாசலுக்கு முன்பு அமர்ந்து வேங்கடவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வீர்கள்" என்றாள் கலைவாணி.

"ஒரு சின்ன விண்ணப்பம். எனக்கு எப்பொழுது ஞானப்பாடம் சொல்லித்தரப் போகிறீர்கள்?" என்றார் ஹயக்ரீவர்.
                                                                                                                                        ............

                                                                                     சித்தர் அகத்தியர்  அருள்

ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (2)



       செடி, கொடி, மரங்களுக்கு இடுக்கில் மறைந்து கொண்டிருந்த அகஸ்த்தியருக்கு ஹயக்ரீவரின் முரட்டுத்தனம் பிடிக்கவில்லை. "திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் ஹயக்ரீவர், ஏன் இப்படி விகல்பமாக நடந்து கொள்கிறார்? இவருக்கு திருமால் தான் இங்கு வேங்கடனாதனாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது தெரியாதா? அல்லது கலிபுருஷன் ஹயக்ரீவரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு, சண்டை போடா அனுப்பி வைத்திருக்கிறானா? என்ன கொடுமை?" என்று மனம் வருந்தினார்.

ஆனாலும்,

ஹயக்ரீவரின் உக்கிரத்தை சந்திபடுத்த தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று துடித்துக் கொண்டே வேங்கடவனைப் பார்த்தார்.

பெருமாள், புன்னகை பூத்தவாறே பொறுத்திரு என்று அகஸ்திய மாமுனிக்கு அடையாளம் காட்டினார்.

சில நாழிகை ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் தவித்த ஹயக்ரீவருக்கு யாரும் தன முன் வந்து பணிந்து நிர்க்காததைக் கண்டு "கலிபுருஷன்" மீது சந்தேகம் ஏற்பட்டது.

"வேண்டுமென்றே தன்னை கலிபுருஷன் தூண்டிவிட்டானா? இங்கு வந்து பார்த்தால், எல்லாமே கருங்கல்லாக இருக்கிறது. ஒரே ஒரு கற்சிலை மாத்திரம் திருமண் போட்டுக் கொண்டு அசையாமல் நிற்கிறது. மனித நடமாட்டமோ அல்லது வேறு பலமிக்க ராட்சதர்கள் நடமாட்டமோ இல்லை. மிருகங்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வேறு இடைத்தை நோககி ஓடுகின்றன. இதென்ன விசித்திரமாக இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"சரி! திரும்பி போய்விடலாம்!" என்று எண்ணித் திரும்பும் பொழுது "சரஸ்வதி தேவி" அவர் முன் தோன்றினாள்! 

கலைவாணியைக் கண்டதும் ஹயக்ரீவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மரியாதைக்கு நமஸ்காரம் சொன்னார். "யாருமில்லாத இந்தக் கோனேரிக் கானகத்தில் தாங்கள் மட்டும் எப்படி தனியாக வந்தீர்கள்?" என்று கேட்டார்.

"ஏன்! ஹயக்ரீவரே! நீங்கள் இல்லையா? பின் எனக்கென்ன பயம்?" 

"நான்தான் இந்தக் காட்டில் காலம் காலமாக இருக்கிறேனே! ஆனால் இன்றுதான் தங்களை முதன் முதலாகச் சந்திக்கிறேன்." என்றார் ஹயக்ரீவர்.

"ஏன்? பெருமாள் இங்கு அவதாரம் எடுத்து கல்யாண குணத்தோடு காட்சி தந்து கொண்டிருக்கிறாரே, அவரைக் காணவில்லையா?" என்றாள் சரஸ்வதி தேவி.

"இல்லை தேவி! அங்கு ஏதோ கல்லில் படம் வரைந்தாற்போல் பகவான் சொரூபம் இருந்தது. அதன் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. முகமெல்லாம் மறைத்துக் கொண்டு திருநாமம் இருந்தது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்தான் திருமால் என்று இப்போது நினைக்கிறேன். சரிதானா?" என்றார் ஹயக்ரீவர்.

"ஹயக்ரீவர் சொன்னதால் அது சரியாகத்தானிருக்கும். அதுசரி, தங்களைப் பார்த்தால் முகத்தில் இயல்பான சாந்தகுணம் இல்லை, பரபரப்புடனும் உக்கிரமாகவும் காணப்படுகிறீர்கள். யாரையாவது தேடிக் கொண்டு வெகுவேகமாகப் போகிறீர்களா?" என்று ஒன்றும் தெரியாதமாதிரி கலைவாணி கேட்டாள்.

"ஆமாம் தேவி! தங்களுக்குத் தெரியும். பிரம்மாவுக்கும் தெரியும். இந்தக் கோனேரிக் காட்டில் ஆண்டாண்டு காலமாக அரசாட்சி செய்து வருகிறேன். இப்பொழுது என் அனுமதியின்றி யாரோ இங்கு வந்து இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து விட்டாராம். யார் அது என்பதைக் கண்டுபிடிக்கவே இங்கு வந்தேன்" என்றார்.

"யார் சொன்னார்கள், இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாக?"

"கலிபுருஷன்!"

"ஓ! அப்படியா? அவர் சொன்னதை அப்படியே நம்பி விட்டீர்களோ. அது சரி, அவர் சொன்னது உண்மையாக இருந்தாலும் யார் இங்கு ஆக்கிரமிப்பு செய்தார் என்பதையும் கலி புருஷனே சொல்லியிருக்கலாமே!" என்றாள் கலைவாணி.

"சொன்னாலும், சொல்லாவிட்டாலும் என் ராஜாங்கத்தில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் தவறுதானே?" என்றார் ஹயக்ரீவர்.

"அது திருமாலாக இருந்தால்?"

"தவறுதான்"

"அப்படி என்றால் அவரை என்ன செய்வதாக உத்தேசம்?"

"இந்த இடத்தை விட்டு வெளியேறச் சொல்வேன்"

""மறுத்தால்?"

"அவரோடு போர் புரிவேன்".

"திருமாலோடு, திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தாங்கள் போர் புரிவதா?"

"ஒரே ரத்தத்தில் பிறந்த அண்ணன்-தம்பிகள் போர் புரிவதில்லையா? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது தேவி?"

"போரிடலாம். தவறில்லை. அதில் வெற்றி தோல்வியை பற்றி முதலில் சிந்திக்கவேண்டும். தோற்றால் எப்படி? ஜெயித்தால் எப்படி? என்று முன் கூட்டியே திட்டமிடவேண்டும்.

"நான் அதைப்பற்றி என்றைக்குமே சிந்தித்ததே இல்லை. இனியும் சிந்திக்க போவதும் இல்லை." என்றார்.

"அப்படி என்றால் உங்களுக்கு தோல்விதான் நிச்சயம்" என்றாள் கலைவாணி.

"அதெப்படி முன் கூட்டியே தாங்கள் கணிக்க முடியும்?"

"பிரம்மாதான் சொன்னார்!"

"என்னவென்று?"

"இப்படி வாரும் ஹயக்ரீவரே! தாங்கள் பொறுமையாகக் கேட்பதாக இருந்தால் சொல்கிறேன். தங்களுக்கு கலிபுருஷன் சொன்ன தகவலால் தாங்கள் கோபப்படுவீர்கள். கலி அவதாரம் எடுத்த திருமாலோடு போர்புரிய ஆக்ரோஷமாகப் போவீர்கள். அப்படி சென்றால் நீங்கள் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடநாதனால் தோற்கடிக்கப் படுவீர்கள். ஆகவே, பிரம்மா இதனை என்னிடம் சொல்லி ஹயக்ரீவருக்கு அறிவுரையும் நல்லவழியும் காட்டிவிட்டுவா" என்று சொல்லி அனுப்பினார். அதனால்தான் நான் இங்கு தங்களைத் தேடிவந்தேன்" என்றார் கலைவாணி.

"தேவி! தாங்கள் சொல்வது எதையும் நான் நம்பவில்லை. என்னை ஏமாற்றவே இப்படி ஒரு நாடகம் நடக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று அட்டகாசமாகச் சிரித்தார் ஹயக்ரீவர்.

"பிறகு தங்கள் இஷ்டம். பிரம்மா என்னிடம் சொன்னதை தங்களிடம் சொல்லிவிட்டேன். வருகிறேன் வராஹமித்ரரே" என்றாள் கலைவாணி.

"என்னது? வராஹமித்ரரா? புதுப் பெயராக இருகிறதே" என்றார் ஹயக்ரீவர்.

"ஆமாம், தாங்கள் தான் வராஹமித்ரராக இந்தத் திருமலையில் கொடியேற்றி காலா காலமாக வாழப் போகிறீர்கள். இதையும் பிரம்மா என்னிடம் சொன்னார்": என்றார் கலைவாணி.

"இன்னும் என்னவெல்லாம் பிரம்மா சொன்னார்? அதை மொத்தமாக் இப்போதே என்னிடம் சொல்லிவிடுங்கள் தேவி!" என்றார் ஹயக்ரீவர்.

"தாங்கள் தான் எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. தங்களுக்கு புஜபல பராக்கிரமம் இருக்கிறது. எல்லோரையும் அடக்கி ஆளும் திறமையும் இருக்கிறது. கொடிய விலங்குகளையும் விரட்டியடிக்கும் மகாசக்தி இருக்கிறது. தாங்கள் நான்குகால் பாய்ச்சலில் பாய்ந்தால் எழுகின்ற புழிதிப்படலம் விண்ணை முட்டும் வரையும் எழும்புகிறது.......... ஆனால்........"

"புத்தி மட்டும் இலை, என்கிறார்களா?" என்று கோபத்தோடு பூமியைக் கிளறியபடியே ஹயக்ரீவர் கேட்டார்.

"பார்த்தீர்களா? இதைக் கேட்கவே தங்களுக்குப் பொறுமை இல்லை. இதற்குத்தான், அறிவு, ஞானம் வேண்டும் என்பது" என்று நாசூக்காக சொல்லி, ஹயக்ரீவரின் மன நிலையைச் சோதித்தாள் கலைவாணி.

"ஏதோ எல்லா அறிவும் தங்களிடம் இருப்பதாகவும், எங்களுக்கெல்லாம் சிறிதும் ஞானம் எதுவும் இல்லை என்பது போலவும் பேசுகிறீர்கள் தேவி! இதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்" என்றார் ஹயக்ரீவர்.

"சரி! அது உங்கள் இஷ்டம். பிரம்மா என்னிடம் சொன்னதை தங்களிடம் சொல்லி விட்டேன். திருமால் அவதாரமான வேங்கடவனுடன் சண்டை போட்டு ஜெயிப்பது எளிதல்ல. அதற்கு சாமர்த்தியம் வேண்டும். அந்த சாமர்த்தியத்தை சொல்லிக் கொடுக்கும்படி பிரம்மா என்னிடம் சொன்னார். அதை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுத்தான் இங்கு வந்தேன். தங்களிடம் தோற்றுப்போனேன்" என்று சொல்லி திரும்பிய கலைவாணி 

"ஹயக்ரீவரே! எப்போதாவது என் உதவி தங்களுக்குத் தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை இங்கு வந்து என்னை கூப்பிடுங்கள். ஓடி வந்து உதவுகிறேன்" என்று சொல்லிவிட்டு மெதுவாக திரும்பினாள்.

      ஒரு வினாடி யோசித்த ஹயக்ரீவர், பெண்மணியின் பேச்சை எல்லாம் நம்ப முடியாது. திருமாலே இப்படிப்பட்ட லீலைகளை எல்லாம் செய்தாலும் செய்திருப்பார். எது எப்படியிருந்தாலும் அந்தக் கலி அவதாரத் திருமாலை முட்டி மோதி, இங்கிருந்து நகர்த்தி தூர எறிந்துவிட வேண்டியதுதான். கலிபுருஷன் நமக்கு நல்வழியைக் காட்டியிருக்கிறான். அவன் சொன்னதுதான் உண்மை" என்று எண்ணி, நேராக கல் அவதாரமான வேங்கடவனை நோக்கி மறுபடியும் நான்குகால் பாய்ச்சலில் சென்றார்.


வேங்கடவன் திருஉருவத்தின் முன்பு நின்று "யாரைக் கேட்டு இங்கு குடி புகுந்தாய்? உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறு" என்று கோபத்தோடு கனைத்தார், ஹயக்ரீவர்.


திருமலைநாதன் அசையவே இல்லை.

"இன்னும் ஐந்து நாழிகை அவகாசம் தருகிறேன். அதற்குள் நீயும் இந்த இடத்தை விட்டு நகர வேண்டும். உனக்காக தோன்றிய இந்த ஏழுமலையும் இருக்கிற இடம் தெரியாமல் மறைய வேண்டும்" என்று மறுபடியும் ஆக்ரோஷமாக நிலை கொள்ளாமல் பூமியைத் தன் கால்களால் தோண்டியபடியே இங்கும் அங்கும் பரபரப்பாக நிலைகொள்ளாமல் அலைந்தார்.

ஆதிசேஷன், உஷ்ண மூச்சை சொறிய முன்வந்தான்.

ஹயக்ரீவரின் கோபத்தைக் கண்டு நதியோரத்து முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தவத்தைக் கலைத்துவிட்டு செய்வதறியாமல் நின்றார்கள்.

இதற்குள், எங்கோ சென்றிருந்த கலிபுருஷன் அங்கு வந்தான்.


"ஹயக்ரீவா! இப்படியெல்லாம் சொன்னால் யாரும் கேட்க்க மாட்டார்கள். அதோ அங்கு நதிக்கரையோரத்தில் மீளாத் தவத்தில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணுவின் பக்தர்களான ரிஷிகளை காலால் எட்டி உதை, எதிரில் பட்டவர்களைப் பல்லால் கடித்து நாசம் செய், மீறி உன்னை  வருபவர்களை சகட்டுமேனிக்கு மிதித்து தள்ளு. இப்படிச் செய்தால்  பெரும் சப்தத்துடன் "ஓ" வென்று தங்களையும் மறந்து கத்தி "நாராயணா" என்று கதறுவார்கள்.

பக்தர்களின் இந்தக் குரலைக் கேட்டு உன் இடத்தில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கும் வேங்கடவன், பக்தர்களுக்காக இங்கிருந்து போய்விடுவான். ஆதிசேஷனும் வாலைச் சுருட்டிக் கொண்டு பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவான். பிறகு உன் இஷ்டப்படி ராஜாங்கத்தை தொடர்ந்து நடத்தலாம்" என்று துர்போதனை செய்தான்.

இதை அப்படியே ஏற்றுக் கொண்ட ஹயக்ரீவர், நான்கு கால் பாய்ச்சலில் புறப்பட முயன்றபோது...

"ஹயக்ரீவா... நில் அங்கே!" என்று அதிகாரமாக ஒரு குரல் கேட்டது.

                                                                                                                                   ..............
                                                                                                                               சித்தர் அகத்தியர்  அருள்




ஹயக்ரீவர் - வராஹமித்ரர்(1)


         
     ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்ட திருமாலின் வம்சம், அம்சம். ஆவணி மாத திருவோண நட்சத்திரம் ஹயக்ரீவர் ஜெயந்தி.

 முரட்டு சுபாவம் இருக்கும் கால பைரவர் ஞானபாடம் 
சொல்லித்தந்தார் சரஸ்வதிதேவி 
அதே போல் முரட்டுத்தனமாக கோனேரிக்கரையில் முரட்டுத்தனமாக  இருக்கும் ஹயக்ரீவருக்கு ஞானபாடம்                    சொல்லித்தந்தார் சரஸ்வதிதேவி .   


கலிபுருஷன் ஹயக்ரீவரின் இருப்பிடத்திற்கு வந்தான். முரட்டுத்தனமாக கலிபுருஷனைப் பார்த்தார் ஹயக்ரீவர்.

"என்ன விஷயம்? யார் நீ?" என அதிகாரமாகக் கேட்டார்.

"தங்களுடைய சிஷ்யன். என் பெயர் கலிபுருஷன். தர்மங்களை செய்துவரும் பலர், அதர்மங்களையும் இந்தக் கானகத்தில் செய்து வருகிறார்கள். அவர்களை தாங்கள் அடையாளம் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகத் தேடி வந்திருக்கிறேன்" என்றான் கலிபுருஷன் பவ்யமாக!

ஒரு நாழிகை யோசித்த ஹயக்ரீவர். "அது சரி, நீ எப்படி இங்கே நுழைந்தாய்? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார் ஹயக்ரீவர்.

"இந்த கொனேரிக் கானகத்தின் அரசனாக தாங்கள் வீற்றிருக்கிறீர்கள். தங்களது துணிவு, தைரியம், பலம் ஆகியவற்றை இந்த பூலோகமே தினமும் கேட்டு வியந்து போகிறது. தாங்கள் என் கோரிக்கையை ஏற்று உதவுவீர்கள் என்று கஷ்டப் பட்டுத் தேடிச் சரண் அடைந்திருக்கிறேன்" என்று காலில் விழுந்தான்.

"என்ன வேண்டும் உனக்கு?"

"எனக்கு என்ன வேண்டும் என்பதல்ல ஹயக்ரீவரே! தங்களுக்குள்ள செல்வாக்கு புகழ், வீரம், தங்களுக்கு உரிமையான இடம், இந்த கானகம் எல்லாம், தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்ற பயம். அதனால் தான் தங்களிடம், நேரிடையாக வந்தேன்" என்று ஹயக்ரீவர் மனதில் தனது விஷ எண்ணத்தைப் புகுத்தலானான் கலிபுருஷன்.

"என்ன சொல்கிறாய் நீ?" என்றார் ஹயக்ரீவர்.

"ஆமாம், பிரபு! தாங்கள் சுதந்திரமாகச் சுற்றி வந்த இந்த கானகத்தின் தெற்குப் பக்கம் கோனேரி நதி ஓடுகிறதல்லவா? அந்த நதிக்கரையில் புதியதாக "ஏழுமலை" ஒன்று தோன்றியிருக்கிறது. அதை, "ஆதிசேஷன்" என்று சொல்கிறார்கள். அங்கே, தேவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் இன்று கூடி, ஏதோ அவதாரம் நடந்து விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்!" என்றான்.

"அப்படியா?"

"அந்த இடமும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடம்தான். தங்களைக் கேட்காமல் ஓர் ஈ, எறும்பு கூட இந்தக் கானகத்தில் நுழைய முடியாது. அப்படி இருக்க, எப்படி தங்கள் அனுமதி இல்லாமல் "ஏழுமலை" வந்தது? இதை தடுக்க வேண்டாமா?" என்றான்.

"ஆதிசேஷன்தானே! வந்துவிட்டுப் போகட்டும்" என்றார் ஹயக்ரீவர்.

"இல்லை ஹயக்ரீவரே! இப்படியே விட்டு விட்டால், நாளைக்கு வானுலகத்திலிருந்து ஒவ்வொரு தேவரும் இந்த இயற்கைச் செழிப்பு மிக்க கோனேரிக் கானகத்தைப் பங்கு போட்டு விடுவார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன். அதுமட்டுமல்ல, ஹயக்ரீவரே! தாங்கள் வானுலகத்திலும் நிம்மதியாக இருக்கவில்லை. பூலோகத்திற்கு வந்தாலும் தங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது. யோசித்து செயல்படுங்கள்" என்று மேலும் தூண்டிவிட்டான் கலிபுருஷன். 

இதைக் கேட்டு ஹயக்ரீவர் மெல்ல யோசிக்க ஆரம்பித்தார். 

நான்கு கால் பாய்ச்சலில், திருமலையே கலங்கும் அளவுக்கு புழுதியை கிளப்பியபடி, பூமி அதிர, மிருக, பறவை இனங்கள் உயிருக்கு பயந்து நாளா புறமும் சிதறி ஓட, ஹயக்ரீவர் குதிரை ரூபத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கண்களில் மிகுந்த கோபம். அவர் விடுகின்ற மூச்சே அனலாக கொதித்தது.


கோனேரிக் கரையில் ஏழுமலையை உருவாக்கி அதில் நிலையாக "உரு" கொண்டு தன்னந் தனியாக கல்வடிவில் "விஷ்ணு" சாந்த சொரூபமாக இருப்பதைக் கண்டு ஹயக்ரீவருக்கு எரிச்சல் ஏற்ப்பட்டது. 


முன்னங்கால் இரண்டையும் உயரமாக தூக்கி கனைத்தார். இந்த கனைப்புச் சத்தம் கோனேரிக் கரையிலுள்ள அத்தனை சுற்று வட்டாரங்களிலும் பலத்த இடி சப்தம் போல் கேட்டது. 



"யார் இங்கே என் அனுமதி இல்லாமல் குடியேறியது? நேர் எதிரில் வந்து நில்"  என்று ஆக்ரோஷமாக கேட்டார்.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு எந்த விதப் பதிலும் எங்கிருந்தும் வராததால் ஹயக்ரீவருக்கு மேலும் கோபம் உண்டாயிற்று.

"இன்னும் ஒரு நாழிகைக்குள் என் முன் வராது போனால், இந்த மலையே துவம்சம் ஆகிவிடும்" என்று பயமுறுத்தினார்.

இதை கேட்ட ஆதிசேஷனுக்கு அடிவயிறு எரிந்த்தது.

ஒரே மூச்சில் ஹயக்ரீவரை "கபளீகரம்" செய்து விடலாமா? என்று தோன்றிற்று.

திருமால், மொனமாக ஆதிசேஷனைப் பார்த்து "பொறுமையாக இரு" என்று கண்களால் அடக்கினார்.
                                                                                                                                               ..........

                                                                                                       சித்தர் அகத்தியர்  அருள்