Sunday, July 12, 2020

அனுமன் ஆஞ்சநேயர் (1)




               திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்கு பிறக்கும் மகன் எனது அம்சமாக தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள்.

              திருமணம் முடிந்தும் அஞ்சனைக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனை குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனை பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.


       தர்மதேவதை கூறியவாறே திருமலைக்கு சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியை பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்த கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார். ஈசனின் அம்சம் அனுமன் 

         அது மட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவானது. உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என வேண்ட, எம்பெருமான் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால்தான் அனுமனின் வால் சக்தி மிகுந்ததாகவும், அழகானதாகவும் விளங்குகிறது.
         எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். எங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருக்கின்றாரே அங்கே வெற்றியைத் தவிர வேறொன்றும் இராது என்பது நம்பிக்கையாகும்.



        இராமாயணம் அனுமனின்  பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது. கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் கங்காவதி வட்டம், ஹம்பி அருகேயுள்ள அஞ்சனாத்திரி மலையே கிட்கிந்தை என்று பலராலும் கூறப்படுகிறது / நாசிக் அருகே இருக்கும் (30km) ஆஞ்சநேரி எனும் இடம்தான் அனுமன் பிறந்த இடமாகும். இங்குதான் அனுமன் தனது பால்ய காலத்தை கழித்ததாக இன்றளவும் இங்குள்ள மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.


   இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர். பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.


No comments:

Post a Comment