Wednesday, July 22, 2020

ஹயக்ரீவர் - வராஹமித்ரர் (4)



       "வராஹ மித்ரரே! உங்களுக்கு இப்பொழுதே இந்த இடத்திலேயே அகஸ்தியர் முதலாக பதினெட்டு வகையான சித்தர்கள் முன்னிலையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் பட்சிகளின் மங்களமான சப்தங்களுக்கு நடுவில் திருமலை வாசனின் அருட்கடாட்சத்தோடு புனிதமிகு கங்கை நதி நீரைத் தெளித்து "ஞானத்தை" தருகிறேன், ஏற்பாயாக!" என்றாள்.

அடுத்த வினாடியே விண்ணுலகத் தேவர்கள் மலர்மாலை தூவ ரிஷிகளும் முனிவர்களும் வேதகோஷத்தோடு வாழ்த்த சரஸ்வதிதேவி தன் அருட்கடாச்சத்தை ஹயக்ரீவருக்கு அளித்தாள்.

"வராஹமித்ரரே! இன்று முதல், இந்த திருமலையில் அவதாரம் எடுத்திருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள் அத்தனை பேரும் முதலில் தங்களை தரிசித்து அனுமதி பெற்ற பிறகுதான் வேங்கடவனைத் தரிசிப்பார்கள். தங்களை தரிசிக்காமல், வேங்கடவனைத் தரிசித்தால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது. இது திருமாலின் கட்டளை!" என்றார் அகத்தியர்.

"ஹயக்ரீவரே! பிரம்மாவின் கட்டளைப்படி என்னுடன் இதுவரை இருந்த ஞானப் பொக்கிஷத்தை பெரும்பகுதி யாம் உமக்குத் தந்தோம். கல்வியில் மேனிலை பெறுவதற்கும், வாக்கில் உயர்நிலை பெறுவதற்கும், சகலவிதமான கலைகளிலும் சிறந்து ஓங்குவதற்கும் இனி என்னையே நம்பி இருக்க வேண்டியதில்லை."

இந்தக் கோனேரி மலையில் சிறு கோயிலைக் கொண்டு திருமால் முன்னிலையில் பக்தர்களுக்கு காட்சி தரும் உங்களை துதி செய்தால் போதும். தாங்களே ஞானத்திற்கு வழிகாட்டியாகவும் விளங்கப் போவதால், தங்கள் அருட்பார்வை பட்டால் போதும், அத்தனை பேருக்கும் ஞானபலம், புத்திபலம், வைரக்கியபலம், ஆரோக்கியபலம் ஆகியயாவும் கிட்டும். இனி தாங்கள் வேறு நான் வேறு அல்ல "சமபலம்" என்று பெருமாள் சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் மெய்சிலிர்த்து வராஹமித்ரரை வணங்கினார்கள்.

"முரட்டுத்தனம் கொண்டு, ஞானமின்மையால், சொல்வார் சொல்லைக்கேட்டு எந்தவித ஒழுக்கக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாக வலம் வந்த என்னை திருமலை வேங்கடவனுக்கு இணையாக நிறுத்தி என் அறியாமையைப் போக்கிய கலைவாணிக்கும், இதற்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் பிரம்ம தேவருக்கும் என் நன்றி" என்று சொன்ன வராஹர், "நான் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க விரும்புகிறேன். வேங்கடவன்  கருணை காட்டுவாரா?" என்று பவ்யமாகக் கேட்டார்.

"நிச்சயமாக கருணை கொண்டு தரிசனம் கொடுப்பார்!"

"எனக்கு வேங்கடவனைத் தரிசிக்க ஆசையிருந்தாலும், சில நாழிகைக்கு முன்பு நான் செய்த தவறு என்னைக் கூச்சப்பட வைக்கிறது தேவி" என்றார் ஹயக்ரீவர்.

"வராஹரே! தாங்கள் தெய்வ சொரூபம் மிக்கவர். முன் ஜென்ம சாபத்தால் கோனேரிக் காட்டில் ஹயக்ரீவராக உலா வந்தீர்கள். வேங்கடவனின் கருணையால் அச்சாபம் நீங்கியது. திருமால் கருணை பெற்று இருப்பவர். அவரது அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிட்டும். வாருங்கள், நானே தங்களை அழைத்துக் கொண்டு அவரிடம் செல்கிறேன்" என்று கூறிய கலைவாணி பெருமாளை காணப் புறப்பட்டாள்.

"என் பக்கத்தில் எப்பொழுதும் இருந்து, என்னை நாடிவரும் பக்தர்களுக்கு நீயும் ஞானத்தையும், பக்தியையும் அளித்து உய்விக்க வேண்டும்" என்று வேங்கடவன், வராஹமித்திறரை ஆலிங்கனம் செய்து, அன்பாக உத்தரவிட்டார்.



இதைக் கேட்டு வராஹமித்ரர் புளகாங்கிதம் அடைந்தார்!

"நீயும் ஒரு பெருமாள் அவதாரம்தான். என்னைக் காப்பது என்பது என் பக்தர்களைக் காப்பது என்பது போலாகும். உனக்கு இங்கு மட்டும்தான் இடம், என்பதில்லை. எந்தெந்த பக்தர்கள் உன்னைத் தொழுது, கல்வியிலும், ஞானத்திலும், கலைத்துறையிலும் மேன்மை அடைகிறார்களோ, அங்கெல்லாம் கோயில் கொண்டு அருள் பார்வையை வீசும் பாக்கியம் உனக்குண்டு" என்று வேங்கடவன் மீண்டும் தொடர்ந்து சொன்னார்.

"பெருமாளே! இந்த அவதாரம் எத்தனை காலம் இருக்கும் என்பதை அடியேன் அறியலாமா?"  "கலிபுருஷனின் அவதாரங்கள் துர்தேவதைகளாக மாறி பெரும் படையோடு என்னிடம் மோதும். அப்போதுதான், யான் "கல்கி" அவதாரம் எடுப்பேன்." என்றார்.

"அப்படியென்றால், இன்னும் எத்தனையோ ஆண்டுகள் ஆகும் அல்லவா?" என்றார் அகத்தியப் பெருமான்.

"சொல்ல முடியாது. நான் கல்கி அவதாரம் எடுப்பதும், எடுக்காமலிருப்பதும் கலிபுருஷன் கையில்தான் இருக்கிறது" என்று வேங்கடவன் கூறிவிட்டு அமைதியானார்.

அகஸ்தியர் பவ்யமாக ஒரு கேள்வியை திருமலயானிடம் கேட்டார். "எல்லாரையும் விட்டுவிட்டு வராஹரை மட்டும் ஏன் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டீர்கள்?

     திருமால் கருணையுடன் பார்த்துவிட்டு "அகஸ்தியருக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கிறார். இந்த பதில் அகஸ்தியருக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான்" என்று ஆரம்பித்துச் சொல்லலானார்.

     "எங்கு ஞானம் இருக்கிறதோ அங்கு பக்தி இருக்கும். பக்தி இருக்கும் இடத்தில் பண்பு, பாசம், இறக்கம், கருணை இவை எல்லாம் குடிவரும். இப்படிப்பட்ட இடத்தில் தான் தெய்வ ஒளி வீசும். திருமலையில் என்னைத் தேடி வருபவர்களுக்கு பக்தி மட்டும் இருந்தால் போதும் என்றில்லாமல், அவர்களுக்கு ஞானமும் வேண்டும்."

  "அந்த "ஞானம்" வராஹரிடமிருந்து கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் வராஹரை என்பக்கம் நிறுத்தி வைத்துக் கொண்டேன்.  வேகத்திற்கு குதிரை ஒரு உதாரணம். சிறுத்தையைக் கூட வேகத்திற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அது ஒரு கொடிய மிருகம். அதைப் பார்க்க ஆசைப்படலாம். ஆனால், அதனோடு பழக முடியாது. அது அப்படிப்பட்ட குணம் கொண்டது. அதே சமயம் "வராஹர்" குதிரை முகத்தோடு கூடிய அவதாரம். எதையும் வேகமாக புத்தியில் பற்றிக் கொள்ள வேண்டும், என்பதற்காகத்தான், குதிரை முகத்தோடு கூடிய வராஹரை ஞான சொரூபமாக பக்கத்தில் வைத்துக் கொண்டேன்."

                                                                                                                  சித்தர் அகத்தியர் அருள்

No comments:

Post a Comment