இந்தக் குரலைக் கேட்டதும் "கலிபுருஷன்" அடுத்த வினாடியே அங்கிருந்து மறைந்து போனான்.
வேகமாகப் பாயத் துடித்து ஹயக்ரீவர் எவ்வளவோ முயன்றும் அவரால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாமல், ப்ரமாஸ்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றுவிட்டார்.
அவருடைய வேகம், பலம், ஆத்திரம், கோபம், வீரம் எல்லாம் பலமற்று, பொடிப் பொடியாகியது.
தன்னை இப்படிக் கட்டுப்படுத்தியது யார்? என்று ஹயக்ரீவர் யோசித்து உணரும் முன்னர் அருகிலிருந்த செடி, கொடி மலைக் குன்றை தாண்டி கமண்டலத்தோடு அவர் முன் வந்து நின்றார் அகஸ்தியர்.
கலைவாணி மூலமாக ஹயக்ரீவருக்கு ஞானோபதேசம் செய்ய பிரம்மா, ஏற்பாடு செய்தார். அதன்படியே கலைவாணியும் ஹயக்ரீவரிடம் அறிவுரை கூற விரும்பினாள். ஆனால் ஹயக்ரீவர் ஏற்கவில்லை. முன்பு இருந்ததைவிட பன்மடங்கு வேகத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் கனைத்துக் கொண்டு கல் அவதாரம் எடுத்த திருமாலுடன் போர்புரிய, ஹயக்ரீவர் முன் வந்த பொழுது, அகஸ்தியர் தாங்க முடியாமல் ஹயக்ரீவரைத் தடுத்து நிறுத்தினார்.
யாருக்கும் கட்டுப்படாத வேகத்தோடு ஹயக்ரீவர் வந்தாலும், அகத்தியப் பெருமானின் சொல்லால் அங்குமிங்கும் அசைய முடியாதவாறு நின்று விட்டார். ஹயக்ரீவருக்கு தலையாயச் சித்தரான அகஸ்தியரைப் பற்றித் தெரியும். ஆனால் பார்த்ததில்லை. இப்பொழுதுதான் அகத்தியரைப் பார்த்தார்.
அகத்தியரின் சொல்லுக்கே தான் அசையாமல் நின்றுவிட்ட நிலையை எண்ணிப் பார்த்த ஹயக்ரீவருக்கு தன் நிலை புரிந்தது.
அகத்தியரின் பலமும் புரிந்தது.
"ஹயக்ரீவரே! சற்று அமைதி கொள்க. தாங்கள் யார் என்பதை அடியேன் அறிவேன். சாட்சாத் திருமாலின் சகலவிதமான நற்குணங்களுடன் அவதாரம் எடுத்த தாங்கள் முனிவர்களைப் பகைத்துக் கொண்டதால் குதிரையாக இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறீர்கள்.
முனிவர்கள், ரிஷிகள் சாபம் விரைவில் தங்களை விட்டு விலகப் போகிறது. கோடானு கோடி ஜனங்களும் தங்களுடைய கருணையினால் புத்திக் கூர்மை பெற்றுத் திளைக்கப் போகிறார்கள் என்று எனக்கு ஞானக் கண் மூலம் தெரிகிறது. இப்படியிருக்க, தாங்கள் கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு திசைமாறிப் போகலாமா?" என்று பவ்யமாகக் கேட்டார், அகஸ்தியப் பெருமான்.
தன்னை அசைய விடாமல் கட்டிப் போட்ட அகத்தியப் பெருமான் மேல் கடும் கோபம் கொண்டு
"அகஸ்தியரே!" என்று படு பயங்கரமாக கனைத்தபடி "உங்களுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை. முதலில் என்னுடைய வேகத்தைத் தடுத்து நிறுத்தியது, என்னுடைய இடத்திற்கே வந்து எனக்கே உபதேசம் கூறி, திருமாலுக்கு சாதகமாகச் செயல்பட்டது. இந்த இரண்டிற்கும் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" என்றார் ஹயக்ரீவர், அகத்தியப் பெருமானிடம்.
ஹயக்ரீவரின் கோபத்தால் சற்றும் தளராத அகத்தியப் பெருமான் "ஹயக்ரீவரே! விநாசகாலே விபரீத புத்தி; என்ற பழமொழி தங்களுக்குத் தெரியாததா? தாங்கள் என்மேல் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. ம்ம்... முடிந்தால் நீங்கள் அடுத்த அடி வைக்கலாம். ஏன் நான்கு கால் பாய்ச்சலில் கூட பாய்ந்து செல்லலாம். நான் ஒன்றும் நிற்க மாட்டேன் அய்யனே" என்றார்.
"என்ன முனிவரே, வேடம் போடுகிறீர்? செய்வதையும் செய்துவிட்டு என்ன வேடிக்கையும் பார்க்கிறீர்களே! முதலில் என்னை இங்கிருந்து போகவிட வழிகாட்டும்" என்றார் ஹயக்ரீவர்.
"எங்கே போகிறீர்கள்?" என்றார் அகத்தியர்.
"என் அனுமதியின்றி குடிபுகுந்த அந்த கலஅவதாரமான வேங்கடவனை இங்கிருந்து விரட்டப் போகிறேன்." என்றார் ஹயக்ரீவர்.
"அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. திருமால், யாருக்கும் எந்த விதத் தீங்கும் இழைக்க மாட்டார். அதுமட்டுமன்றி - யார் என்ன பிரார்த்தனை, எங்கு செய்தாலும் அதை சட்டென்று நிறைவேற்றியும் காட்டுவார்." என்றார் அகத்தியர்.
"ஓ! அப்படியா செய்தி! அப்படியென்றால் அவரோடு நான் மோதவேண்டாம். நான் சொன்னால் அவர் அப்படியே கேட்டுவிட்டு இங்கிருந்து சென்று விடுவாராக்கும்?"
"ஆமாம்! ஆனால் ஒரு சிறு திருத்தம். தாங்கள் "சொன்னால்" என்பதை விட அவரிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டு கேட்டால் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்தான், கேட்டவர்களுக்கு கேட்டதெல்லாம் தரும் கருணை வள்ளலாயிற்றே!"
"இப்போது என்னதான் சொல்கிறீர்கள்?"
"திருமலையில் குடிகொண்டிருக்கும் திருமாலிடம் தாங்கள் விவேகத்தோடு மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் தங்கள் வேண்டுகோளை நிச்சயம் ஏற்பார்."
"அப்படியும் அவர் அங்கிருந்து நகர மறுத்தால்?"
"தங்கள் ப்ரார்த்தனையில்தான் குற்றம் இருக்கும் என்பேன்."
"எப்படி பிரார்த்தனை செய்வது, எங்கிருந்து செய்வது?"
"அப்படி கேளுங்கள். எனக்கு முழுமையாக எதுவும் தெரியாது. பிரார்த்தனையை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை கலைவாணி சரஸ்வதி தேவிதான் மிக நன்றாக அறிவாள். அந்த சரஸ்வதி தேவியை நோக்கி கைகூப்பி நமஸ்கரித்துக் கேளுங்கள்" என்றார்.
"கலைவாணி வருவாளா?"
"கண்டிப்பாக வருவாள். பிரார்த்தனை சொல்லித்தருவாள். திருமலை வேங்கடவனும் உங்கள் பிரார்த்தனையை கேட்டு செவி மடுப்பார். பிறகென்ன? சண்டை போடாமல், காயம்படாமல் நீங்கள் நினைத்ததை அடைந்து விடுவீர்கள்" என்று பவ்யமாக சொன்னார் அகத்தியர்.
அகத்தியப் பெருமானுக்கு உற்ச்சாகம் தாங்கமுடியவில்லை. எப்படியோ ஹயக்ரீவரின் வேகத்தை தடுத்து நிறுத்தி அவருக்கு நல்வழி காட்டிவிட்டோம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து நகன்றார்.
அதெப்படி சண்டைபோடாமல் ஜெயிக்க முடியும்னு குறுமுனி சொல்கிறாரே, அதையும்தான் பார்ப்போமே என்று ஹயக்ரீவர் யோசித்து கலைவாணியை நோக்கி "சரஸ்வதி தேவியே இங்கு வா" என்று பலமுறை அழைத்தார். பலமுறை அழைத்தும் கலைவாணி வராததால், ஹயக்ரீவருக்கு கோபம் வந்தது. ஒரே பாய்ச்சலில் வேங்கடவன் மீது பாய்ந்தார். ஹயக்ரீவர் வரும் வேகத்தை அறிந்து, சட்டென்று பூமிக்குள் தன்னை இழுத்துக் கொண்டார், பெருமாள்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹயக்ரீவர், எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து தலைக்குப்புற கோனேரி நதிப்ரவாகத்தில் விழுந்து கொண்டிருக்கும் பொழுதுதான், சில நாழிகை முன்பு கலைவாணி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
"எப்பொழுதுதாவது என் உதவி தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை அழைத்தால் ஓடி வந்து உதவுகிறேன்" என்று சரஸ்வதி தேவி சொன்னது ஹயக்ரீவருக்கு நினைவுக்கு வரவே, "வராஹன் அழைக்கிறேன்! தேவி சரஸ்வதியே வருக" என்று மூன்று முறை அழைத்தார்.
அடுத்த நாழிகைக்குள்,
கோனேரிக்கரையின் நதியில் விழுந்து கால்கள் ஒடிந்து விழவேண்டிய ஹயக்ரீவரை சரஸ்வதிதேவி தாங்கிக் கொண்டாள். ஹயக்ரீவர் பெரும் ஆபத்திலிருந்து தப்பினார்.
நன்றாக வளர்ந்திருந்த பசும்புல் செடியில் ஹயக்ரீவர் மயக்க நிலையில் கண் துயின்று கொண்டிருக்க, அகஸ்தியர் வெண்சாமரத்தால் அவருக்கு வீச, சரஸ்வதிதேவி கருணை பொங்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கலிபுருஷன், அங்கே காணப்படவில்லை.
சில நாழிகை கழிந்தது.
பட்சிகள் சப்தத்தினாலும் அருகிலிருக்கும் பாபநாசம் மலையிலிருந்து தெள்ளிய நீர் வீழ்ச்சி அமைதியாக பூமாதேவியின் பாதங்களை நோக்கி மகிழ்ச்சியோடு நீர்த்திவலைகளை அங்குமிங்கும் தெளித்துக் கொண்டு சென்றதால், அவற்றின் குளிர்ச்சி ஹயக்ரீவரின் முகத்தில் பட்டுச் சென்றது.
மயங்கி கிடந்த ஹயக்ரீவர் மெல்ல கண் திறந்தார்.
எதிரே, கருணை பொங்கும் குரு பகவான் ஸ்தானத்தில் அன்னை சரஸ்வதி தேவி அமர்ந்திருக்க, அகஸ்தியர் சாமரம் வீசுவதையும், சித்தர்கள், முனிவர்கள், ராஜ ரிஷிகள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை மெல்லிய குரலில் தனக்காக ஜெபிப்பதையும் கேட்டு, துள்ளி எழுந்தார்.
"ஹயக்ரீவரே அவசரப்படாதீர்கள். அமைதியாக அமருங்கள். தங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை" என்றாள் கலைவாணி.
ஹயக்ரீவருக்கு இப்பொழுதுதான் நடந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வந்தது.
கலிபுருஷன் பேச்சைக் கேட்டிருந்தால் தன் கதி என்ன? என்று யோசித்துப் பார்த்த ஹயக்ரீவருக்கு, அன்னை கலைவாணி மீதும், அகஸ்தியப் பெருமான் மீதும் அளவற்ற மரியாதை ஏற்பட்டது.
கலைவாணி தேவியிடம் கை கூப்பி நன்றி சொன்னார்.
"தாயே! எனக்கு அசுரபலம் வேகம் இருந்தாலும், ஆழ்ந்த கல்வி ஞானம் இல்லை. இருந்திருந்தால், கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு பாதாளத்தில் விழுந்திருக்கமாட்டேன். நான் தங்களிடம் தன்யனானேன். எனக்கு "ஞானத்தை" சொல்லிக் கொடுங்கள். அன்னை சரஸ்வதி தேவியே" என்றார் ஹயக்ரீவர்.
"ஹயக்ரீவரே! பிரம்மா சொன்னபடியேதான் எல்லாமும் நடக்கின்றன. தங்களுக்கு முனிவர்களால் முன் ஜென்மத்தில் கொடுத்த சாபம் இன்று முதல் விலகிவிட்டது. இனி தாங்கள் ஹயக்ரீவராக காட்ச்சியளித்தாலும், திருமலையில் இனி வராஹமித்ரர் என்ற திருநாமத்தோடு திருமலை வாசலுக்கு முன்பு அமர்ந்து வேங்கடவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வீர்கள்" என்றாள் கலைவாணி.
"ஒரு சின்ன விண்ணப்பம். எனக்கு எப்பொழுது ஞானப்பாடம் சொல்லித்தரப் போகிறீர்கள்?" என்றார் ஹயக்ரீவர்.
............


No comments:
Post a Comment