Sunday, July 12, 2020

அனுமன் ஆஞ்சநேயர் ( 4)



பக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்


      ஆஞ்சநேயரின் பரம பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு வினோத ஆசை இருந்தது. அதாவது, ஆஞ்சநேயருடன் சொக்காட்டம் ஆட வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.

     இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன் ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.

        ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார். “பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது.” என்றார். பக்தனும் சம்மதித்தான்.

        இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, ‘ஜெய் அனுமான்’ என்ற படி காய்களை உருட்டினான்.

       அந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் அந்த பக்தனே வெற்றி பெற்றான். அனுமனோ சரி அடுத்தமுறையாவது ஜெய்த்துவிடலாம் என்ற முனைப்பில் மீண்டும் மீண்டும் விளையாடினார். ஆனால் வெற்றியோ பக்தன் பக்கம் மட்டுமே இருந்தது.

       தற்போது பக்தனுக்குப் பதிலாக, ஆஞ்சநேயர் மனவருத்தத்தில் ஆழ்ந்தார். ராமனிடம் “சுவாமி, நான் உங்கள் திருநாமத்தை ஒவ்வொரு முறை உச்சரித்தும் எனக்கு தோல்வியா?” என புலம்பினார்.

        அஞ்சனை மைந்தன் முன் தோன்றிய ராமன், “அனுமன்... நீயோ என் பக்தன். அதனால் என் சக்தி உன்னுள் இணைந்துள்ளது.
ஆனால், அவனோ உன் பக்தன், ஆதலால் அவனில் நம் இருவரின் சக்தியும் இணைந்து விடுகிறது. இது தான் அவனின் வெற்றிக்குக் காரணம்” என்றார்.

நெகிழ்ந்து போன ஆஞ்சநேயர் பக்தனுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றார்.


ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்.

ஏன் வடை மாலை சாத்துகிறோம் :

           அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார். "ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்..."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா... கேளேன்" என்றார் ஸ்வாமிகள். "ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார். பெரியவா மெளனமாக இருக்கவே... அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

          ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். "பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா...' என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

      அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

         அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.
        
           இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
       வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.


       எது எப்படியோ... அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன... சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி" என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.


சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன்:
         ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே ஸ்ரீராமரின் அனுக்கத் தொண்டருமான அனுமனும் நுழைய முற்பட்டார். அவரை ராமர் தடுத்தார். சீதா தேவியைப் போலவே தங்களின் மீது அன்பு வைத்திருக்கும் தன்னை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? என அனுமன் கேட்டார். “சீதா தன் நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொண்டிருப்பதால் உள்ளே அனுமதித்ததாக”  கூறினார்.

       இதைக் கேட்டு வெளியில் வந்த அனுமன், மறுநாள் சீதா தேவி தன் நெற்றியில் செந்தூரம் இடுவதைக் கண்டு அதற்கான காரணத்தைக் கூறுமாறு சீதையிடம் கேட்டார். அனுமனின் களங்கமில்லா மனதை அறிந்த சீதை “தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொள்வதால் தன் கணவரும், அனைவருக்கும் பிரபுவான ஸ்ரீராமரின் ஆயுள் நீளும்” எனக் கூறினார். இதைக் கேட்ட அனுமனும் உடனே அயோத்தியின் கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்காரரிடம் செந்தூரம் தருமாறு கேட்டார். அந்தக் கடைக்காரரும் ஒரு டப்பாச் செந்தூரத்தைக் கொடுத்தார். இது பத்தாது என்றெண்ணிய அனுமன் அந்தக் கடைக்குள் புகுந்து செந்தூர மூட்டைக்குள் கையை விட்டு, தன் முகம் மற்றும் இதரப் பகுதிகளில் பூசிக்கொண்டார்.மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரண்மனைக்குச் சென்றார்.

      செந்தூரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரண்மனைக்கு வந்த அனுமனைக் கண்ட ஸ்ரீராமர் சிரித்துக்கொண்டே அதற்கான காரணத்தைக் கேட்டார். “நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொள்வதால் தங்களின் ஆயுள் நீடிக்கும்” என்று சீதா தேவிக் கூறியதாகவும், சிறிய அளவில் இடும் செந்தூரத்திற்கே தங்கள் ஆயுள் நீண்டால், உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கு நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்வதால் மேலும் உங்களுக்கு பலகாலம் ஆயுள் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். அனுமனின் இந்த பிரதிப் பயன் கருதாப் பக்தியை அங்கிருந்தோர் அனைவரும் போற்றினர்.  

          அனுமனைப்போல் எவ்வித எதிர்பார்ப்பின்றி இறைவன் மீது செலுத்தப்படும் பக்தியே உண்மையான பக்தி என்பது இக்கதையின் சாராம்சமாகும்.

          சிரஞ்சீவியான அனுமார் இன்றும் நம்முடன் இருக்கிறார். அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. ராமநாமம் ஜெபிப்போம் அனுமன் அருள் பெருவோம்.

No comments:

Post a Comment