Monday, July 20, 2020

சிவபெருமான் (5)


                 மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணி மூல நாளிலே ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். ஏழை முதியவளுக்காக பிட்டுக்கு மண் சுமந்தததும், மாணிக்கவாசகரின் பக்தியை உணர்த்த நரிகளை பரிகளாக்கியதும் ஆவணி மூலத்தில் ஆடிய திருவிளையாடலாகும். 

திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம், மதுரைப்புராணம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்

                ஓயாத பெருமழை பெய்து வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. இறைவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்.

        பிரம்மபடி பெற்ற இறைவன் உண்ட மயக்கம் தொண்டருக்கும் வருமே அது பிட்டு உண்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே அவனை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான்
இறைவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க, அனைத்து கரைகளும் அடைக்கப்பெற்று வைகை நதி வெள்ளம் கட்டுக்குள் வந்தது. இறைவன் மறைந்தார். வந்தி மூதாட்டியை சிவகணங்கள் வந்து அழைத்துச் சென்றன.

     உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. 



                இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள், அன்றைய தினம் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் பிரச்சினை விலகும். எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும். சகல ஆலயங்களிலும் நடைபெறும் புட்டுத் திருவிழாவில் கலந்து கொண்டால், உத்தியோக முயற்சியில் வெற்றி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.

திருவிளையாடல் புராணம் பிரிக்கப்பட்டுள்ள விதம்

திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நூலில் மதுரைக்காண்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே பல காப்பிய உறுப்புகள் இடம் பெற்றுள்ளன.
அவை
1.காப்பு
2.வாழ்த்து
3.நூற்பயன்
4.கடவுள் வாழ்த்து
5.பாயிரம்
6.அவையடக்கம்
7.திருநாட்டுச்சிறப்பு
8.திருநகரச்சிறப்பு
9.திருக்கையிலாயச்சிறப்பு
10.புராணவரலாறு
11.தலச் சிறப்பு
12.தீர்த்தச் சிறப்பு
13. மூர்த்திச் சிறப்பு
14.பதிகம் ஆகியவை ஆகும்.
இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன.
மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. இந்நூலில் மொத்தம் 3363 பாடல்கள் உள்ளன.
இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
நான்மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.
திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
பரிகளை நரிகளாக்கிய இறைவன்
       பரிகளை நரிகளாக்கிய இறைவன் பாண்டிய மன்னனரின் மந்திரியாக பணியாற்றியவர் மாணிக்கவாசகர். பணி என்னவோ பாண்டியனிடம்தான் என்றாலும் மனமெல்லாம் அந்த சுந்தரேஸ்வரனிடம்தான் இருந்தது. அதனால்தால் குதிரைகள் வாங்குவதற்காக மன்னன் கொடுத்த பணத்தை கொண்டு கோவில் கட்டி முடித்து விட்டார் மாணிக்கவாசகர். இதனைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், மாணிக்கவாசகருக்கு தண்டனை அளித்தார். சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமானே குதிரை வியாபாரியாக வந்து காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும். பின்னர் பரிகள் எல்லாம் நரிகள் ஆக மாறி காட்டுக்குள் ஓடிய உடன்தான் மாணிக்க வாசகரின் அருமை மன்னருக்கு தெரிந்தது. வந்தது இறைவன்தான் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர். இந்த திருவிளையாடல் நடந்ததும் ஒரு ஆவணி மூல நட்சத்திரத்தில்தான்.


No comments:

Post a Comment