"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும். இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பி.
குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன். மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள். ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.
முருகனை தகப்பன் ஸ்வாமி அல்லது ஸ்வாமினாதன் என்பார்கள். அதாவது தந்தைக்கே குருவானவர் என்று அர்த்தம். ஸ்வாமிமலைக்கு அப்படி பெயர் வந்ததின் காரணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை கைலாயத்துக்குச் சென்ற முருகனை பிரும்மா அவமதித்து விட்டார். ஆகவே அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முருகன் பிரும்மாவிடம் பிரணவ மந்திரமான ஓம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். ஆனால் பிரும்மாவினால் அதற்கு பதில் கூற முடியாததினால் அவர் தலையில் ஓங்கி அடித்த முருகன் அவரை பிடித்து சிறையிலும் அடைத்து விட்டார் (ஆதி சங்கரரின் ஸ்ரீ சுப்பிரமணிய புஜாங்கம்- ஸ்லோகம் 12). பிரும்மா சிறை வைக்கப்பட்டதினால் படைப்புக்கள் நின்று விட சிவபெருமானே முருகனை சந்தித்து அதன் விளக்கத்தை தனக்குக் கூறுமாறு முருகனிடம் கேட்க, சிவபெருமானிடம் அவர் தனக்கு சிஷ்யனாக இருந்து அதைக் கேட்க சம்மதித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சிவப்பெருமான் சிஷ்யனாக மாற குருவான முருகன் அதன் அர்த்தத்தைக் கூறினார். (குமரகுருபரர், கந்தர்கலை வெண்பா 90 –98). ஆகவே அவரை ஸ்வாமினாதன் அல்லது குருநாதன் என அழைத்து அவர் தங்கி இருந்த மலைவீட்டை ஸ்வாமி மலை என அழைத்தார்கள் (அருணகிரிநாதர், திருப்புகழ் ).
முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. சக்தியின் சிலம்பில் இருந்து வெளிவந்த நவ சக்தி எனப்பட்ட வீரபாகுவும், அவருடைய எட்டு சகோதரர்களும் ஒரு லட்ஷ வீரர்களுடன் வெளி வந்தார்கள். தன்னுடைய பெற்றோர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திற்கு முருகன் புறப்பட்டு சென்றபோது அந்த நவ சக்திகளும், ஒரு லட்ஷப் படையினரும் அவருடன் சென்றார்கள்.
அன்னை பார்வதி முருகப்பெருமானுக்குத் தனது சக்திகளை உள்ளடக்கிய வேல் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அந்த வேலைக் கொண்டு முருகன் சூரபத்மனுடன் போரிட சென்றார். சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடித்தது இன்னொரு கதை ஆகும். வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் அனைவருக்கும் காட்டினார். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது மையல் கொள்ள, அவளை தன் வசப்படுத்தி அவளது காதலை அடைய வேண்டும் என்று எண்ணிய முருகன் ஒரு வேடவர் போல, மரத்தைப் போல, ஒரு கிழவரைப் போல பல ரூபங்களைக் எடுத்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய சகோதரரான கணேசரின் துணையை பெற்றுக் கொள்ளும்வரை அவரால் அவளை அடைய முடியவில்லை. அவருடைய மூத்த சகோதரர் ஒரு யானையின் உருவில் வந்து வள்ளியை பயமுறுத்தி முருகனை ஏற்றுக் கொள்ள வைத்தார். திருத்தணியில் அவர்களது திருமணம் நடைபெற்றது.
வள்ளி வலது பக்கத்திலும், தேவசேனா அவருடைய இடது பக்கத்திலுமாக காட்சி தருகிறார்கள். அவருடைய வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் இருந்தாலும், வள்ளியின் கையில் உள்ள தாமரை மலரோ , இல்லை தேவசேனாவின் கையில் உள்ள லில்லிப் பூவோ வாடவில்லை. அந்த இரண்டு தெய்வீக பெண்களுடனான திருமணத்தின் மூலம் முருகன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டையுமே அங்கீகரிப்பதைக் காட்டுகிறது.




No comments:
Post a Comment