Sunday, July 12, 2020

12 ஆழ்வார்கள் (1)




           ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். 

     அவர்கள் பாடிய 4000 பாடல்களை (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். 

1 . பொய்கையாழ்வார் - காஞ்சி.
2 . பூதத்தாழ்வார் - திருக்கடன் மலை.
3 . பேயாழ்வார் - மயிலை.
4 . திருமழிசையாழ்வார் - திருமழிசை.
5 . நம்மாழ்வார் - திருக்குருகூர்.
6 . மதுரகவியாழ்வார் - திருக்கோளூர்.
7 . குலசேகராழ்வார் - திருவஞ்சிக்களம் .
8 . பெரியாழ்வார் - ஸ்ரீவில்லிபுத்தூர்.
9 . ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர்.
10.தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமண்டங்குடி.
11. திருப்பாணாழ்வார் - உறையூர்.
12. திருமங்கையாழ்வார் - திருவாலி திருநகரி

1. பொய்கையாழ்வார்

          இவரே பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.
       இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.
        இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது.
        ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார்.
        பொய்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் மொத்தம் 6 கோயில்களைப் பற்றி பிற ஆழ்வார்களுடன் இணைந்து மங்களாசனம்  (மங்களாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்றுவது ஆகும்.) செய்துள்ளார்.
     இவர் கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் ஆகிய வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

2. பூதத்தாழ்வார்

      முதல் ஆழ்வார்களில் இவர் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார்.
     உலக வாழ்க்கையில் இன்புறாமல் திருமாலிடத்தில் நீங்கா பக்தி கொண்டவர். திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாருடன் இறைவனைத் தரிசித்த போது அவரைப் பற்றி நூறு பாடல்கள் பாடினார். அவை இரண்டாம் திருவந்தாதி எனப் போற்றப்படுகின்றன.
       இவர் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 14 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

3. பேயாழ்வார்

         இவர் முதல் ஆழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவர் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றியவர்.
        இவர் திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி தினமும் போற்றுவார். அப்போது அவர் கண்களில் ஆனந்த வெள்ளம் வழிந்தோடும். பாடல்கள் பாடும்போது ஆடிப் பாடி அழுது தொழுவார்.
          இறைபக்தியினால் இவர் பித்தர் போலும் பேயர் போலும் திரிந்ததினால் பேயாழ்வார் என்றழைக்கப்பட்டார். திருக்கோவிலூர் மிருண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் இருந்த போது இவரே முதலில் இறைதரிசனம் கிடைக்கப் பெற்றார்.
          இவர் தனியாக ஒரு கோவிலிலும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோவில்களிலும் மங்களாசனம் செய்துள்ளார்.

4. திருமழிசை ஆழ்வார்

         இவர் திருமழிசை என்னும் இடத்தில் பார்கவ முனிவர் கனகாங்கி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பின் திருவாளன் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் திருமாலின் ஆழியான சக்கரத்தின் அம்சமாவார்.
          கனிக்கண்ணன் என்பவரை சீடராக்கக் கொண்டு பல இடங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளார். வயது முதிந்த பெண்ணிற்கு இளமையை திருப்பி அளித்த பெருமை இவரைச் சாரும்.
        சைவம், சமணம், புத்தம் என பல மதங்களை ஆராய்ந்து சைவராக இருந்த‌   இவரை பேயாழ்வார் வைணவ மதத்திற்கு மாற்றினார். இவர் பக்திசாரர், திருமழிசையார், திருமழிசைப்பிரான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
       இவர் நான்முகன் திருவந்தாதி என்ற நூறு பாடல்களையும், திருசந்த விருத்தம் என்ற 120 விருத்தங்களைக் கொண்ட பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தனியாகச் சென்று இரண்டு கோவில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோவில்களையும் மங்களாசனம் செய்துள்ளார்.

5. நம்மாழ்வார்

          வைணத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள‌ திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் காரியார், உடைய நங்கை ஆகியோருக்கு மகனாகத் தோன்றினார்.
        இவர் பிறந்தவுடன் அழாமல் தன் ஞானத்தால் சடம் என்னும் காற்றை வென்றதால் சடகோபன் என்றழைக்கப்பட்டார்.
        பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளியமரப்பொந்தில் யோகத்தில் இருந்து மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் தந்து அவரை சீடராகப் பெற்ற பெருமை இவரைச் சாரும்.
        இவர் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி ஆகிய பாடல்கள் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையானவை ஆகும் என்பது பெரியோர்களின் வாக்கு.
        இவர் திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்னேசர் என்பவரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் சடாரி, பராங்குசன்,மாறன், வகுளாபரணன், குருகையர் ஆகிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
      வைணவத்தில் நம்மாழ்வாரை ஆன்மாவாகவும், ஏனைய ஆழ்வார்களை உடலாகவும் கருதுவதுண்டு. இவர் 37 திருக்கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

6. திருமங்கையாழ்வார்
        இவர் சோழ நாட்டில் உள்ள திருக்குரையலூர் என்னும் ஊரில் ஆலி, வல்லிதிரு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் திருமாலின் கையிலுள்ள சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக்க கருதப்படுகிறார்.
         இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன் என்பதாகும். இளமையிலே வீரத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். இவருடைய வீரத்தைப் பார்த்த சோழ அரசன் படைதலைவராக இருந்த நீலனை திருமங்கை என்னும் நாட்டிற்கு சிற்றசரானக்கினான்.
      தன் மனைவியின் விருப்பப்படி தினமும் அடியார்களுக்கு திருவமுது படைத்தும், இறைவழிபாட்டில் ஈடுபட்டும் செல்வங்களை இழந்தார். பின் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அடியார்களுக்கு திருவமுது படைத்து வந்த நிலையில் திருமால் திருமகளோடு திருமணக் கோலத்தில் திருமங்கையாழ்வாருக்கு காட்சியருளினார்.
     இவர் பெரியதிருமொழி, குருந்தாண்டகம், நெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய படைப்புகளை படைத்துள்ளார்.
      இவர் 46 கோவில்களைத் தனியாகவும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோவில்களையும் மொத்தம் 82 கோவில்களை மங்களாசனனம் செய்துள்ளார். இவரே ஆழ்வார்களுள் அதிகக் கோவில்களை மங்களாசனம் செய்தவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார்.

7. குலசேகர ஆழ்வார்

      இவர் திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் திடவிரதன் என்ற சேர நாட்டு அரசனுக்கு திருமாலின் மார்பில் இருக்கும் மணியான கௌஸ்துப அம்சத்தின் வடிவாக தோன்றினார்.
      இவர் போர்க்கலைகளில் சிறந்து விளங்கிய இவர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவர். நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்த இவரை இவ்வுலக மாயை நீக்கி இறை தொண்டு செய்யுமாறு திருமால் பணித்தார்.
      இவர் திருமால் மீது பாடிய பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படுகிறது. இவர் கொல்லிக்காவலன், கூடல்நாயகன், வில்லவர் கோன் ஆகிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
      இவர் தனியாக ஒரு கோவிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஏழு கோவில்களையும் மங்களாசனம் செய்துள்ளார். 


No comments:

Post a Comment