8. பெரியாழ்வார்
இவர் திருவில்லிபுத்தூரில் முகுந்தர், பதுமவல்லி ஆகியோருக்கு திருமாலின் வாகனமான கருடாழ்வாரின் அம்சமாகத் தோன்றினார். இவரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர்.
திருவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாளின் மீதிருந்த அளவற்ற பக்தியின் காரணமாக தினமும் அவருக்கு பூமாலை தொடுத்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் திருமாலின் கருணையால் வல்லபதேவன் என்ற பாண்டிய அரசனின் அவையில் வாதாடி அரசனின் சந்தேகத்தை போக்கி பொற்கிழி பெற்று யானையில் ஏற்றி ஊர்வலம் செய்து சிறப்பிக்கப்பட்டார்.
அப்போது திருமால் திருமகளுடன் கருட வாகனத்தில் காட்சியருளினார். அதனைக் கண்ட விஷ்ணுசித்தர் திருமாலின் அழகில் சொக்கி, திருமாலுக்கு கண்திருஷ்டி பட்டுவிடும் எனக்கருதி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடினார்.
இறைவனுக்கே கண்ஏற்றினை கழிக்க முயன்றதால் ஆழ்வார்களில் பெரியவர் என்னும் பொருள்படும்படி பெரியாழ்வார் என்றழைக்கப்பட்டார். இவரே ஆண்டாள் நாச்சியாரின் வளர்ப்பு தந்தை ஆவார்.ஆண்டாளை அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததினால் திருமாலின் மாமனார் என்ற சிறப்பினைப் பெற்றார்.
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி போன்றவை இவரின் படைப்புகளாகும். இவர் தனியாக 2 கோவில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 19 திவ்ய தேசக் கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
9. ஆண்டாள் நாச்சியார்
இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ர சாயி கோவிலின் வளாகத்தில் பெரியாழ்வாரால் துளசி செடி அருகில் கண்டெடுக்கப்பட்டார்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் இவர் ஒருவரே ஆவார்.
இவர் திருமாலின் மனைவியான திருமகளின் அம்சமாகத் தோன்றியவர். சிறுவயது முதலே திருமாலின் மீது அதீத பக்தி கொண்டார். நாளடைவில் அந்த பக்தியே திருமாலின் மீது காதலாக மாறி திருமாலை மட்டுமே திருமணம் செய்வேன் என்ற மன உறுதியைக் கொடுத்தது.
மானிடர்கள் இறைவன்பால் மாசற்ற அன்பினைச் செலுத்தி மனஉறுதியுடன் வழிபட்டால் இறைவனை அடைய முடியும் என்ற உண்மையை தனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்.
சூடிக்கொடுத்த சுடர் கொடியாள், கோதை நாச்சியார், கோதை பிராட்டி என்றெல்லாம் இவ்வம்மை சிறப்பிக்கப்படுகிறார்.
இவர் இயற்றிய பாடல்கள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்று வழங்கப்படுகின்றன. இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து மொத்தம் 10 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
இவர் திருமாலின் தொண்டர்களின் காலடி மண்ணைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டதால் தொண்டரடிப் பொடியாழ்வார் என்றழைக்கப்பட்டார்.
இவர் சோழ நாட்டில் திருமண்டக்குடி என்னும் ஊரில் வேத விசாரதர் என்பவருக்கு திருமாலின் வைஜெயந்தி வனமாலையின் அம்சமாகத் தோன்றினார். இவரின் இயற்பெயர் விப்பிர நாராணயர் என்பதாகும்.
இவர் திருமாலின் மீதுள்ள அளவற்ற பக்தியால் தன்னை அடிமையாக பாவித்துக் கொண்டு பூமாலைகளுடன் பாமாலைகள் பாடி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டார்.
இவர் தேவதேவி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டு தன் செல்வத்தை இழந்த நிலையில் இவருக்காக திருவரங்கத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரங்கன் கோவில் வட்டிலைத் தந்து உதவ இவர் மேல் திருட்டுப்பழி விழுந்தது. இறுதியில் உண்மை அரங்கனால் உலக்கு உணர்த்தப்பட்டபோது இவர் அரங்கனுக்காக அடிமை பூண்டார்.
இவர் திருபள்ளிஎழுச்சி மற்றும் திருமாலை ஆகியவற்றை படைத்துள்ளார். இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து 2 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
11. மதுரகவி ஆழ்வார்
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோளுர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே செந்தமிழில் நாவிற்கினிய பாடல்களைப் பாடிய காரணத்தால் மதுரகவி ஆழ்வார் என்றழைக்கப்பட்டார்.
இவர் வடநாட்டில் உள்ள திருமால் சேத்திரங்களை தரிசித்துக் கொண்டிருக்கும்போது தென் திசையில் ஒரு ஒளி ஏற்படுவதைக் கண்டு அத்திசை நோக்கி செல்கையில் அங்கு நம்மாழ்வாரைக் கண்டார்.
அவரிடம் கேள்வி வினவ அதுவரை பேசாதிருந்த நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு பதிலுரை கூறினார். அதனைக் கேட்ட மாத்திரத்தில் நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றார். அவரிடமிருந்து சூட்சமங்களைக் கற்று உணர்ந்தார்.
இவர் கண்ணிநுன் சிறுதாம்பு என்ற பதிகத்தை மட்டும் தன் குருவாகிய நம்மாழ்வார் மீது பாடியுள்ளார். இவர் இளங்கவியார், ஆழ்வாருக்கு அடியான் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
12. திருப்பாணாழ்வார்
இவர் திருச்சி உறையூரில் திருமாலின் மார்பில் உள்ள மருவான ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக பாணர் குலத்தில் தோன்றியவர். தீண்டத்தகாதோர் குலத்தில் தோன்றியதால் காவிரியாற்றின் கரையில் நின்று அரங்கனைப் பாடுவார்.
ஒரு சமயம் சாரங்கர் என்பவர் அரங்கனுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும்போது வழியில் நின்ற திருப்பாணாழ்வாரை கல்லால் தாக்கினார். இதனால் ஆழ்வாரின் நெற்றியில் இரத்தம் வழிந்தது.
இதனை அறியாது கருவறைக்கு சென்று சாரங்கர் பார்த்தபோது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிந்தது கண்டு திகைக்க திருப்பாணாழ்வார் தனது பக்தன் எனவும், அடியவருக்கு ஏற்படும் துன்பம் தனக்கு ஏற்பட்டது எனக்கூறி திருப்பாணாழ்வாரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்து வர கட்டளையிட்டார் திருமால்.
திருமாலின் விருப்பப்படி உள்ளே வந்த திருப்பாணாழ்வார் திருமாலின் உச்சி முதல் பாதம் வரை உள்ள அங்கங்களைப் பற்றி பாடி பூத உடலோடு இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
இறைவன் முன் அனைவரும் சமம் என்ற உண்மையை இவரின் வாழ்க்கை மூலம் அறியலாம். இவர் பாணர், முனிவாகனர், யோகிவாகனர் போன்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து 3 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.
- இவர்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
- இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் ஆவர்.
- முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள.
- மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் மற்றொரு ஆழ்வாரான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
கருட ஆழ்வார்
காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி.
திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.
பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். சுகீர்த்தி மற்றும் ருத்திரை, கருடனின் மனைவியர்.
பெருமாள் கோயில் கொடிமரங்களில் கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது.
அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர்.
விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். (சிறிய திருவடி – அனுமார்)
" திருமாலின் சிறப்பினை உலக்குணர்த்திய ஆழ்வார்களைப் போற்றுவோம்"
" திருமாலின் சிறப்பினை உலக்குணர்த்திய ஆழ்வார்களைப் போற்றுவோம்"
ஸ்ரீநிவாசா


No comments:
Post a Comment