Sunday, July 12, 2020

தமிழ்க் கடவுள் முருகன் (3)


   பக்தர்கள்



1. அகத்தியர்
                     முதலாம் சங்கத் தலைவரான அகஸ்தியர் முருகனின் சிஷ்யர் ஆவார். வடக்கில் இருந்து தெற்குப் பகுதிக்கு வந்த அந்த முனிவருக்கு முருகனே தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தாராம். (அருணகிரிநாதர் , சேவல் விருத்தம் , ll 14 – 16). முருகனே அகஸ்தியருக்கு ஆசிரியராகவும், உபதேசம் செய்தவராகவும் இருந்துள்ளார் (தொட்டிகலை சுப்ரமணிய முனிவர் - தணிகை திருவிருத்தம்).

2. நக்கீரர்
                நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் கார்க்கிமுகி என்ற பூதத்தினால் சிறை வைக்கப்பட்டு உண்ணப்பட இருந்த நிலையில், முருகனைப் போற்றும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாட, முருகன் உடனே அங்கு வந்து அந்த பூதத்தைக் கொன்று அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தார். ஆறுமுகனின் அருள் இல்லை என்றால் அவர்கள் அனைவருமே அந்த பூததினால் கொல்லப்பட்டு இருப்பார்கள்.



3. ஔவையார்
                       பால முருகனையும் தமது தெய்வக்குழந்தையாகவே கருதி அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். போகும் வழியில் ஓர் அடர்ந்த காடு, அவர் நெடுந்தூரம் நடந்து வந்திருந்ததால் களைப்படைந்திருந்தார். பசியும் சேர்ந்து அவரை வருத்தியது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார். அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான். மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார். ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான். 'பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்! என்று கூறினான்.. அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது. ‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

         தனக்கு பழம் கிடைக்கவில்லையே என்று கோபமுற்ற முருகப் பெருமான் அம்மையையும் அப்பனையும் விட்டு விட்டு தனக்கென ஒரு இடத்தைத் தேடி புறப்பட்டார். தமிழ் பாட்டி ஔவையார் முருகப் பெருமானின் முன் வந்து 'முருகா சின்னப் பழத்திற்காக சினம் கொள்ளலாமா?. ஆறுவது சினம் அல்லவா' எனக் கூறி விட்டு 'தாயிடமும் தந்தையிடமும் செல்லலாம் வா' என்று வாஞ்சையுடன் அழைத்தார்.

4. அருணகிரிநாதர்
                              முருகப் பெருமான் தீயவர்களுக்கும் அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகளை தருகிறார். பல தீய பழக்கங்களுக்கும் அடிமையான அருணகிரிநாதர் தனது தவற்றை உணர்ந்து கொண்டப் பின் ஆலய கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் அவரைக் காப்பாற்றிய முருகன், அவருக்கு திருநீறையும், ஜெப மாலையும் தந்தார் (திருப்புகழ் v. 106). அதன்பின் அருணகிரி முருகனின் அனைத்து தலங்களுக்கும் விஜயம் செய்து அவரை துதித்து திருப்புகழ் மற்றும் பல பாடல்களைப் பாடினார். அதற்கு முன்னால் அவருக்கு தனது புனித பாதங்களை முருகப் பெருமான் ஸ்வாமிமலை ஆலயத்தில் காட்டினார் (திருப்புகழ் v. 199).

5. குமரகுருபரர்
                        இவர் ஐந்து வயதானவரை ஊமையாக இருந்தார். ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவரை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று ஆறுமுகனை வேண்டினார்கள். அதன் பின் அவருக்கு பேச்சு வந்துவிட்டது. அதன் பின் பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்த அவர் முருகன் மீது கந்தர்கலி வெண்பா மற்றும் வேறு பல பாடல்களைப் பாடி உள்ளார். அவர் வாரணாசியில் சைவ மடத்தை நிறுவி சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர். அவரைப் பொறுத்தவரை முருகனை அவர் குழந்தையாகவே பார்த்தவர். முத்துகுமாரஸ்வாமி பிள்ளைத் தமிழ் என்ற பாடலை இயற்றினார்.

6. பாம்பன் சுவாமிகள்
                                   1923 ஆம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கி இடது கணுக்கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது முறிந்து விட்ட கணுக்காலை மருத்துவத்தினால் நிவாரணம் செய்ய இயலாது என மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள். ஆனால் அவர் மனதை தளர விடவில்லை. அவர் தனது பந்தத்தை துறந்து முருக பக்தரானார். முருகனிடம் தனது நோயை நிவர்த்திக்குமாறு வேண்டிக் கொண்டார். மருத்துவ மனையில் இருந்தபோது அவரது இடது கணுக்கால் முட்டியை அங்கு வந்த இரண்டு மயில்கள் வருடிக் கொடுத்தன. அவ்வளவுதான் அவருடைய கால் வலி உடனே நின்றது. அதைத் தவிர முருகன் ஒரு குழந்தையின் உருவில் வந்து தனது வேலினால் அவரது முறிந்து போன காலை தடவி விடுவது போல உணர்ந்தார். அதன் பின் அவர் கால் நல்ல நிலைக்கு வந்துவிட்டது. அவர் பாடிய ஷண்முகக் கவசத்தை பக்தியோடு பாடினால் பல நோய்கள் விலகும், மன பயமும் ஒழியும் என்பது நம்பிக்கை. ஒருமுறை அவருக்கு முருகனே நேரில் காட்சி தந்தார். முருகன் மீது பல பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

7. கிருபானந்தவாரியார்

                                     சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், அவர் இயற்றியுள்ள நூல் கந்தவேள் கருணை. 
                                      
8. சிகண்டி
                  உண்மையான ஒரு பக்தருக்கு கடவுள் எந்த வகையிலாவது வந்து உதவி புரிவார். சிகண்டி எனும் முனிவர் கதிர்காமத்தில் இருந்தபோது ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது. ஆனால் கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தர் வெற்றிலைக் காம்பை கிள்ளி அதன் மீது போட்டார். உடனே அந்த வெற்றிலைக் காம்பு முருகனின் வேலாக மாறி அந்த மதம் பிடித்த யானையைக் கொன்றது. முருகன் மீதான நம்பிக்கையும், பக்தியும் அந்த முனிவரின் உயிரைக் காப்பாற்றியது.

9. ஆதி சங்கரர்
                                                 சைவ சமயத்தை சார்ந்த தத்துவஞானி. சங்கரரின் எதிரியான அபினவ குப்தா என்பவர் சங்கரருக்கு உடல் உபாதைக் கொடுத்து அவரை வேதனைப் படுத்தினார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி அவரை திருச்செந்தூரில் உள்ள ஜெயந்திபுரத்துக்கு சென்று அங்கு முருகனை வேண்டுமாறுக் கூறினார். சங்கரரும் ஜெயந்திபுரத்துக்குச் சென்று ஸ்கந்தனை வழிபடத் துவங்கியபோது அங்கு முருகனின் காலடியில் ஆதிசேஷன் விழுந்து வணங்கியதைக் கண்டார். உடனே அவர் பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் நிலையில் ஷண்முகரைப் போற்றும் ஷண்முக புஜாங்கம் என்ற பாடலை பட அவருடைய நோய் அவரை விட்டு அகன்றது. ஷண்முக புஜாங்கத்தை ஓதிக் கொண்டு திருநீரை அணிந்து கொண்டால் எப்பேற்பட்ட நோயும் விலகும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

10.காசியப்ப சிவாச்சாரியார்
                             இவர் தமிழில் கந்தபுராணத்தை இயற்றியவர். இதில் உள்ள முதல் வரிகளை தமது பக்தர்களுக்காக கந்தனே இயற்றினார். சிவாச்சாரியார் இதை இயற்றி வெளியிட்டபோது ஒரு புலவர் எழுந்து அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, முருகனே அங்கு தோன்றி அந்த எதிர்ப்பை வலிவிழக்கச் செய்தார். வேலவின் மீது அபார பக்தி கொண்ட சிவாச்சாரியார் இன்றும் மக்களிடையே பிரபலமாகவே இருக்கின்றார்.

11. திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்
                                                           முருகன் மீதான பல பாடல்களை இயற்றி உள்ளார். அவர் முருகனை ஒரு தாயுள்ளம் படைத்தவராகவும், ஒரு தாயார் எப்படி தமது குழந்தைகளுக்கு அன்பைக் காட்டி வளர்க்கின்றார் என்பதைக் எடுத்துக் கூறி முருகன் மீதான பாடலை பாடி உள்ளார் (திருப்போரூர் சன்னிதி முறை ). மதுரை தமிழ் சங்கத்தில் இருந்த புலவர் ஒருவரின் வம்சாவளியிரான திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், திருப்போரூர்ரை கண்டு பிடித்து அதை சீர்படுத்தியவர். முன்னர் உண்மையில் அந்த இடம் பனைமரங்கள் அடர்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்கு ஒரு மண் புற்றில் முருகன் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருந்தார். திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் அந்த புற்றில் இருந்த முருகனின் சிலையைக் கண்டுபிடித்து எடுத்து, அங்கு ஆலயத்தை அமைத்து அதில் முருகனின் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

12. சுப்ரமணிய முனிவர்
                                     இவர் முருக பக்தர் மட்டும் அல்ல, மிகப் பெரிய புலவரும் ஆவார். அவர் முருகனைப் போற்றிப் தணிகை திருவிருத்தம் என்பதைப் பாடி கண் பார்வையை இழந்துவிட்ட ஒரு பக்தருக்கு கண் பார்வை கொடுக்குமாறு முருகனை வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்ற முருகன் அவர் கேட்ட வரத்தை அருளினார்.

13. வள்ளலார்
             இந்த வடலூர் துறவி சமரச சன்மார்கத்தை போதித்தவர். ஞான தேசிகன் என்ற உருவில் வந்த முருகன் இவருக்கு அருள் புரிந்தார். அவர் இயற்றிய திருவருட்பா (ஐந்தாம் திருமுறை, தேவமணிமலை) ஆறுமுகன் மீது அவர் கொண்டு இருந்த பக்தியை எடுத்துக் காட்டி, அவர் பாதத்தில் சரண் அடைந்தால் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்லவை நடக்கும் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

14. தேவராஜா ஸ்வாமிகள்
                               முருகன் பக்தி இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர்களில் கந்தர் ஷஷ்டி கவசத்தை இயற்றிய தேவராஜா ஸ்வாமிகளும் ஒருவர். ஸ்கந்தனின் அருளினால் அவருடைய பிரச்சனை தீர்ந்தது. அதை அழகான செய்யுள் போன்றக் கவிதையில் அவர் பாடி உள்ளார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தோன்றும் நோய்களின் அடிப்படைக் காரணங்களையும், மனத் துயர்களின் காரணங்களையும் கூறி, அந்த நோய் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் எப்படி முருகனின் வேல் நிவர்த்திக்கின்றது என்பதை அதில் பாடலாகப் பாடி உள்ளார். அது மட்டும் அல்லாமல் முருகன் எந்தெந்தப் பெயர்களில் வழிபடப்படுகிறார் என்பதையும் கூறி உள்ளார்.

15. வள்ளிமலை ஸ்வாமிகள்
                                           மைசூர் மகராஜரின் சமையல்காரராக இருந்த அர்த்தநாரி என்ற இவர் கடுமையான வாயிற்று வலியினால் அவதிப்பட்டு பழனி ஆண்டவரிடம் சரண் அடைந்து குணம் அடைந்தார். அதன் பின்னர் அவர் திருவண்ணாமலையில் இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் சிஷ்யராகி, அவர் அறிவுறுத்தியபடி வள்ளி மலைக்குச் சென்றார். அங்கு சென்று முருகன் வழிபாட்டு மரபை போதித்தார். அவர் திருப்புகழ் எனும் பாடலைப் பாடி உள்ளார். அவர் எப்போது முருகனை துதித்தாலும், முருகன் அவருக்கு மயிலாக வந்து காட்சி தந்தாராம் . 

16. முத்துஸ்வாமி தீட்சிதர்
                         கர்நாடக பாடல் கீர்த்தனைகளை இயற்றி உள்ள இந்த இசை ஞானிக்கு திருத்தணி ஆலயத்தில் முருகப் பெருமான் சிறுவன் உருவில் காட்சி தந்துள்ளார். அது முதல் அவருடைய கீர்த்தனைகளில் முடிவாக குருகுஹா என்ற வார்த்தைகள் இருக்கும் வகையில் அவற்றை இயற்றினார்.

17. குணசீலர்
            ப்ரிதிவாட்டி பயங்கரன் என்பவர் ஒருமுறை இவரை பாடல் போட்டிக்கு அழைத்தார். குணசீலரும் அதில் வெற்றி அடைய முருகனின் அருளை வேண்டினார். ஆனால் அந்த போட்டியில் அவரே ஆரம்பித்த பாடலை முடிக்க முடியாமல் திணறியபோது, அவரால் புறங்கணிக்கப்பட்ட சிஷ்யர் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்த ஆட்டிடையன் ஒருவர் அதை முடித்துக் கொடுத்தார். அந்த சிஷ்யரின் வாதத் திறமையை பார்த்த பயங்கரன், சிஷ்யரின் திறமையே இப்படி உள்ளது என்றால், குரு இன்னும் எத்தனை திறமையாக இருப்பார் என எண்ணி பயந்து கொண்டு குணசீலரின் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னரே குணசீலர் அங்கு வந்து தன்னைக் காப்பாற்றியது முருகனே என்பதை உணர்ந்து கொண்டார்.

18. பகழிகுட்டர்
                  இவர் ஒரு வைஷ்ணவராக இருந்தாலும், முருக பக்தி மிக்கவர். அவருக்கு ஒருமுறை தீராத வாயிற்று வலி வந்தபோது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடலை பாட அவருடைய வயிற்று வலி நின்றது. அந்த காலத்தில் சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களிடையே கருத்து வேற்றுமை ஓயாது இருந்து கொண்டு இருந்ததினால், முருகனிடம் பக்தி கொண்டு இருந்த இவரை வைஷணவர்கள் மதிக்காமல் இருந்தார்கள். ஆனால் முருகன் தன்னுடைய பக்தரை அந்த நிலையில் இருக்க விடவில்லை. அவருடைய பக்தியின் மேன்மையை உலகிற்குக் காட்ட விரும்பினார். ஆகவே ஆலயத்தில் தன்னுடையக் கழுத்திலிருந்த மாணிக்க மாலையை பகழிகுட்டரின் கழுத்தில் விழ வைத்தார். ஆலயத்தில் அதைக் காணாமால் தேடிய அதிகாரிகள் அந்த மாலை பகழிகுட்டரின் கழுத்தில் இருந்ததைக் கண்டு தம்முடைய தவறை உணர்ந்து அதுமுதல் பகழிகுட்டருக்கு தகுந்த மரியாதையை தந்தார்கள்.

19. சிதம்பர முனிவர்
                           17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சிதம்பர முனிவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவஞான யோகி என்பவருடைய சிஷ்யராக இருந்தார். அவருடைய நோயை ஆறுமுகப் பெருமான் தீர்த்து வைத்தார் (ஷேத்திரகோவை பிள்ளை தமிழ்). முருகனைக் குறித்து நிறையப் பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

20. பொய்யாமொழிப் புலவர்
                         சிவபெருமானின் பெரும் பக்தரான பொய்யாமொழிப் புலவர் என்பவர் ஒருமுறை, தான் பாடினால் சிவனை மட்டுமே போற்றிப் பாடுவேன் என்று கூறி விட்டு முருகனைப் போற்றிப் பாட மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் ஒரு வேடன் வேடத்தில் வந்து அந்த முனிவரிடம் சிவனும் முருகனும் ஒருவரே என்றும் அவர்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் கூறி அவருடைய அகந்தையை அழித்தார் 

பெயர்கள்


  • சேயோன் - சேய் என்றால் குழந்தை அல்லது மகன் என்பதாகும் முருகன் குழந்தையாக காட்சி அளிப்பாதால் இந்த பெயர் காரணம்
  • அயிலவன் - வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.

  • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • முருகன் - அழகுடையவன் அல்லது அனைத்து சக்திகளையும் பெற்ற முழு முதற் கடவுள் என்பதன் அர்த்தம் .

  • குமரன் - குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்.
  • குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
  • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன் அல்லது கங்கையின் மகன் என்றும் பொருளாகும்
  • வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன் முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் என பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம் தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரை சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் - வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
  • சரவணன் - சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவன்.
  • சேனாதிபதி - சேனைகளின் தலைவன் அல்லது (சேனை நாயகன்)
  • வேலன் - வேலினை ஏந்தியவன்.
  • சுவாமிநாதன் - தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.
  • கந்தன் - சிவபெருமாளின் நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீ பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் பட்டதால் முருகன் குழந்தையாக தொன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்

  • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலுட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவன்.
  • சண்முகன் - ஆறு முகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆனதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
  • தண்டாயுதபாணி - தண்டாயுதத்தை ஏந்தியவன் அல்லது (பண்டார நாயகன்)
  • வடிவேலன் - வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.
  • சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன். அல்லது இனியவன் என்றும் பொருளாகும்.
  • மயில்வாகனன் - மயிலை தனது வாகனமாக கொண்டவன்.
  • ஆறுபடை வீடுடையோன் - முருகனின் சாதனை புரிந்த இடங்களை கோவிலாக மறுவி அதை ஆறுபடையப்பன் என்ற பெயரும் உள்ளது.
  • வள்ளற்பெருமாள் - வள்ளியை மணந்ததாலும் அல்லது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர் காரணம்
  • சோமாஸ்கந்தன் - சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையாம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
  • முத்தையன் - முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.
  • சேந்தன் - தன்னை வணங்கும் பக்தர்களை இன வெறுபாடின்றி ஒன்றினைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் என பெயர்.
  • விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர் ஏற்பட்டது.
  • சுரேஷன் - வட மாநிலங்களில் அழகுக்கு சுரேசன் என்று பொருள் முருகன் அழகுக்கு அதிபதி என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
  • செவ்வேல் - சேவல்வேல் என்பதை மறுவி கால போக்கில் செவ்வேல் என மாறியது.
  • கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
  • சிவகுமரன் - சிவபெருமாளின் திருமகன் அல்லது சிவனின் குமரன் என்பதேயாகும்.
  • வேலாயுதன் - முருகன் தனது கையில் இருக்கும் வேலயே ஆயுதமாக கொண்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.
  • ஆண்டியப்பன் - ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.
  • கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தொன்றிய கடவுள் என்பதால் கந்தகடவுள் அல்லது கந்தசாமி என பெயர் ஏற்பட்டது.
  • செந்தில்நாதன் - சிந்தனைசிற்பி என்றும் சிந்தனைநாதன் என்பதை மறுவி செந்தில்நாதன் ஆக மாறியது அதாவது முருகன் தனது உயர் சிந்தனையால் சூரபத்மனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
  • வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
  • விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
  • அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
  • கங்கை தன் கரங்களால் சிவபெருமாளின் நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீப்பிழம்பின் கருவில் தொன்றிய குழந்தை முருகனை ஏந்தியதால் காங்கேயன்.
  • சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணபவன்/சரவணமூர்த்தி.
  • கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
  • தாமரை மலரின் கந்தகத்தில் தொன்றியதால் கந்தன்
  • ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன்
  • ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகம் / திருமுகம்
இவ்வாறு தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.
  • திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்றபின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
  • திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

  • பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
  • சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
  • திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
  • பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.


* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்


* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை


* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்


* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி


* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்


           குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என குன்றுகள் தோறும் கோயில்களைக் கொண்டுள்ளார். 

           முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவில்கள் பல அமைந்துள்ளன.


          மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்
றன.

No comments:

Post a Comment